Certificate of Appreciation to Lakshmi Hospital for excellent work in Government Insurance Scheme; Presented by Perambalur Collector.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 11,630 நபர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.26.84 கோடி செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது – 1,41,437 குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும் , மேலும், 108- அவசரகால ஊர்தி ஓட்டுநராக இருந்து பணியின் போது விபத்தில் சிக்கி மரணமடைந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சுகந்தியிடம் கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது. 23.09.2018 முதல் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டமும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் மூலம் காப்பீட்டு அட்டை பெற்றவரின் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தனலட்சுமி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, லெட்சுமி மருத்துவமனை, நிரஞ்சன் மருத்துவமனை, அற்புதா மருத்துவமனை, எம்.ஜி மருத்துவமனை மற்றும் எஸ்.கே.எஸ். மருத்துவமனை ஆகிய 7 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவசேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 11,630 பயனாளிகளுக்கு ரூ.26,84,62,843 சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 2,816 பயனாளிகளுக்கு ரூ.9,72,16,504 செலவில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1,41,437 குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.1,20,000/- மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று (ரூ.1,20,000/- மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் செயல்படும் காப்பீட்டுத் திட்ட மையத்தை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம், என தெரிவித்தார்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய அரசு தலைமை மருத்துமனை மற்றும் லெட்சுமி மருத்துமனைக்கு நினைவு பரிசுகளையும், பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளையும், காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சிறப்பாக பணிபுரிந்த காப்பீட்டு அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், அவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்(பொ) மரு.இளவரசன், மாவட்ட காப்பீடு திட்ட அலுவலர் பிலாலுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!