Chanin snatching in Namakkal, Madurai youth arrested

நாமக்கல்லில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறித் சென்ற மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரது மனைவி சாந்தி (32). இவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ள போலீசார் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
கடந்த 10-ந் தேதி சாந்தி இருசக்கர வாகனத்தில் நாமக்கல் பஸ்ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, சாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக சாந்தி கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்து போலீசார் புலன் விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில் மதுரை கிருஷ்ணாநகர் காலனியை சேர்ந்த 17 வயது வாலிபர் இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல்லில் உள்ள டுட்டோரியல் மையம் ஒன்றில் படிப்பதாக கூறிய அந்த வாலிபர், தனது பிறந்த நாளை கொண்டாட பணம் இல்லாததால் சாந்தியிடம் நகையை பறித்து மதுரையில் உள்ள நகைகடை ஒன்றில் அதை விற்பனை செய்து, அந்த பணத்தில் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன 5 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.