Chariot festival near Preambalur – ogalur! With the multitude of of devotees participated cord caught the toad
பெரம்பலூர் அருகே உள்ள ஒகளூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், பெண்ணகோணம் அருகே உள்ள ஒகளூரில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத விழா கடந்த 27–ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன் மயில் வாகனம் உள்பட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து மாரியம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து நாதஸ்வர இசை, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து வீதி வீதியாக இழுத்து வந்தனர்.
தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக முக்கிய வீதிகளில் பவனி வந்தது. பக்தர்கள் புடை சூழ தேர் அசைந்து ஆடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று மாரியம்மனுக்கு வழிபாடு செய்தனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஒகளூர் மற்றும் சுற்று வட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர்.