Chennai DRO to force the state land to be strapped Patta Revenue Officers Union Complaint
தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ள புகார் மனுவிவரம்:
“சென்னை மாவட்ட வருவாய் அலுவலராக திரு. சு.கருணாகரன் என்பவர் கடந்த 6 மாத காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியேற்ற நாள் முதல், சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயல்பாடுகளில் நேரடியாக தலையிட்டு வருகிறார்.
பட்டா வழங்க இயலாத இனங்களிலும், தனிநபர்களுக்கிடையே நிலவும் சொத்துக்களில், ஒரு சாராரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை) ஆகிய பணியிடங்களில் தனக்கு வேண்டியவர்களை நியமித்து, அவர்களிடம் தேவைக்கு ஏற்றபடி அறிக்கைகளை மாற்றித்தருமாறு நிர்பந்தம் செய்து வருகிறார்.
இந்நேர்வுகளில் தனக்கு ஏற்றபடி அறிக்கை தர மறுக்கும் அலுவலர்கள் மீது அச்சுறுத்தி பணியிட மாற்றம் செய்வதும், அவர்கள் மீது குற்றக்குறிப்பாணை (17பி) ஏற்படுத்தி விடுவதாக மிரட்டும், குறிப்பாக பெண் அலுவலர்களை கண்ணியமற்ற முறையிலும், ஆபாச வார்த்தைகளை பிரயோகப்படுத்தியும், ஒட்டு மொத்த சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமணம் செய்யப்பட்டுள்ளவற்றில், போலிப் பத்திரம் மூலம் விற்பனை செய்து வரும் இடைத்தரகர்களுடன் கைகோர்ந்து கொண்டு, அவர்களுக்கு சாதகமாக பட்டா வழங்க, உரிய அலுவலக வழிமுறையினை காற்றில் பறக்கவிட்டு, சென்னை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், நிலம் பொருள் தொடர்பான பிரிவு (ஜே) கண்காணிப்பாளர்களை உதாசீனப்படுத்தி மறைமுகமாக செயல்முறை உத்தரவு பிறப்பித்து அதனடிப்படையில் பட்டா வழங்க வட்டாட்சியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தி, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் உள்ள தலைமையிடத்து துணை வட்டாட்சியர்களிடமிருந்து மாதா மாதம் குறிப்பிட்ட தொகையினை கையூட்டாக தர வேண்டும் எனவும் நிர்பந்தித்து வருகிறார்.
சென்னை மாவட்டத்தில் பணிமாறுதல் செய்யவும், விரும்பிய பணியிடத்திற்கு, பணியிட மாற்றம் வழங்கவும் கையூட்டு பெற்றுக்கொண்டு பணியிடம் வழங்கி வருகிறார். சென்னை மாவட்ட வருவாய் அலுவலரான திரு. க. கருணாகரன் என்பவர், அரசினால் வழங்கப்பட்ட (CUG) செல்லிடப்பேசி எண்ணை பயன்படுத்தாமல், தன்னுடைய அடிப்படை பணியாளர்களின் செல்லிடப்பேசியின் வாயிலாக, தவறான செயல்களை செய்து வருகிறார்.
சென்னை மாவட்ட வருவாய் அலுவலரின் உறவினர்களான தினேஷ் மற்றும் இளங்கோவன் ஆகியோர்கள் அனைத்து வட்டங்களிலும், மாவட்ட வருவாய் அலுவலரின் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் சில குறிப்பிட்டுள்ள நிலங்களில் அரசு விதிமுறைகளுக்கு முரணாக பட்டா வழங்க வட்டாட்சியர்களை கட்டாயப்படுத்தி வருகிறார்.
1. மாம்பலம் வட்டம், விருகம்பாக்கம் கிராமம், பகுதி எண். 3, நகர புல எண். 30/1, 30/2 மற்றும் பகுதி எண். 26, நகர புல எண். 28, மொத்தம் – 1 ஏக்கர் 44 சென்ட். மேற்படி இடத்தில் அனுபவதாரராக இல்லாத திரு. மாரி என்பவருக்கு பட்டா வழங்க நிர்பந்தித்து வருகிறார். இதன் மதிப்பு சுமார் 80 கோடி ஆகும்.
2. மாம்பலம் வட்டம், மாம்பலம் கிராமம், பகுதி எண். 9, நகர புல எண். 8/3 – இரு வேறு ஆவணங்கள் கொண்டுள்ள மேற்படி தாக்களில், அனுபவத்தில் இல்லாத திரு. ராமலிங்கம் என்பவருக்கு பட்டா வழங்க நிர்பந்தித்து வருகிறார்.
3. சாலிகிராமம், பகுதி எண். 11, நகர புல எண். 30, சர்க்கார் புறம்போக்கு 0.6 ச.மீ அளவுடைய நிலத்தினை திரு. யுவராஜ் என்பவருக்கு பட்டா வழங்க நிர்பந்தித்து வருகிறார்.
4. வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராமம், புல எண். 333, இரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமணதாரர்களுக்கு ஆதாரவாக செயல்பட்டு நீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்வதை தாமதிக்க வட்டாட்சியரை நிர்பந்தித்து வருகிறார்.
5. வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராமம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைந்துள்ள இடமானது மாநகராட்சிக்கு சொந்தமானது. இந்நிலத்தினை மாவட்ட வருவாய் அலுவலருக்கு ஆதரவான நபருக்கு பட்டா வழங்க நிர்பந்தித்து வருகிறார்.
6. வேளச்சேரி வட்டம், திருவான்மியூர் கிராமம், திருவாளர்கள் PEE & DEE கட்டுமான இடத்தில் நீதிமன்ற வழக்கிற்கு எதிராக தலையிட்டு வருகிறார்.
7. வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் சரவணன் மற்றும் கோபாலகிருஷ்ணன் அண்ட் கோ என்பவரிடம் ரூ. 3,79,000/- வசூல் செய்ய வேண்டிய நிலையில் Defaulter-க்கு ஆதரவாக செயல்பட்டு மேற்படி சம்பந்தப்பட்ட கோப்பினை வருவாய் ஆய்வாளரிடமிருந்து கைப்பற்றி தன்வசம் முடக்கி வைத்துள்ளார்.
8. மாம்பலம் வட்டம், விருகம்பாக்கம் கிராமம், பகுதி எண். 34, நகர புல எண். 148, அரசு புறம்போக்கு (Taluk Board) இதில் அப்பகுதி மக்கள் பலர் நிரந்தரமாக குடியிருந்து வரும் நிலையில் மேற்படி இடத்தில் சுமார் 6848 சதுர அடியினை வில்சன் மற்றும் ஜானகி ஆகியோருக்கு பட்டா வழங்க நிர்பந்தித்து வருகிறார். இதன் மதிப்பு 7 கோடி ஆகும்.
9. மேற்குறிப்பிட்ட மாம்பலம் வட்டம், விருகம்பாக்கம் கிராமம், அரசு புறம்போக்கு (Taluk Board) நிலத்தினை அபகாpக்கும் நோக்கில், இக்கோப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக “ஜே” பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு செல்லாமல் அலுவலக நடைமுறைக்கு முரணாக, உதவி இயக்குநா; (ந.க. ஈ2/1878/2018, நாள் : 24.07.2018) அலுவலக கோப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் தனி நபர் ஒருவருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில் கையொப்பமிட்டுள்ள உதவியர் மற்றும் கண்காணிப்பாளர் குறித்த விவரங்களை கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. இந்நேர்வில் தான், கடந்த 17.11.2018 அன்று மாவட்ட வருவாய் அலுவலரின் ஈப்பு ஓட்டுநர் திரு. பிரேம் என்பவரின் கைப்பேசியிலிருந்து, மாம்பலம் வட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரு.அருண் என்பவரிடம், “சார் சொன்ன பட்டாவை முடிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்” என்று ஈப்பு ஓட்டுநரான திரு.பிரேம் என்பவர் ஆரம்பித்து பேசும் பொழுது, மாவட்ட வருவாய் அலுவலர் இடைமறித்து “நீயெல்லாம் ஒரு DT யா? பூ….. கோ…. உனக்கு 17பி போட்டாதாண்டா சரியா வரும், கொம்… உன்னை தூக்கி அடிக்கிறேன் பாரு…” என்று மிகவும் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசி மாவட்ட வருவாய் அலுவலர் மிரட்டல் விடுத்துள்ளார். (இது குறித்தான கைப்பேசி உரையாடல் பதிவு ஆடியோ வடிவில் குறுந்தகட்டில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).
சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய்த்துறைக்கும், தமிழ்நாடு அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் திரு. சு. கருணாகரன் என்பவரை உடனடியாக சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் பதவியிலிருந்து விடுவிக்குமாறும், அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்!
இவ்வாறு அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், சு. கருணாகரன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என தெரிவித்துள்ளனர்.