Chennai High Court dismisses SV Sekar’s bail plea
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்ட புகாரில் எஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பாக, நடிகர் எஸ்.வி.சேகர் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராம திலகம், எஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.