Chief Minister did not criticize Palanisamy: A. Raja explanation!

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் சிவசங்கரை ஆதரித்து, தி.மு.கவின் துணை பொது செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆ. இராசா நேற்று மாலை பேசும் போது:

தமிழக முதல்வர் இ.பி.எஸ்., குறுக்கு வழியில், கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் என ஆபாசமாக விமர்சித்து பேசினார். இவரது பேச்சு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. அவரது பேச்சுக்கு தி.மு.க., மகளிரணி தலைவியும், எம்.பி.,யுமான கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர், பற்றி தனது ஆபாச பேச்சுக்கு ஆ.ராசா விளக்கமளித்து, பெரம்பலுாரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தி.மு.க., தலைவர் ஸ்டாலினையும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியையும், அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்தி, நான் பேசிய தேர்தல் பரப்புரை பேச்சுகளை ஒட்டியும், வெட்டியும் தங்களுக்கு ஏற்றார்போல், விரசமாகவும் சித்தரித்து, சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே சிலர் உலவவிட்டிருக்கிறார்கள். என்னுடைய பேச்சுனுடைய சாரம் எங்களுடைய தலைவர் கட்சியில் படிப்படியாக வளர்ந்து, மாவட்ட பிரதிநிதியாக, பிறகு பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞரணி செயலராக, துணை பொதுச்செயலராக, பொருளாளராக, பிறகு செயல் தலைவராக, தலைவராக கட்சியிலே வந்தார்.

ஆட்சியிலே எம்.எல்.ஏ.,வாக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, பிறகு துணை முதல்வராக இப்படி பரிணாம வளர்ச்சி படிப்படியாக பெற்று, ஒரு முழுமை பெற்ற அரசியல் குழந்தை என்கின்ற அடையாளத்தில் சொன்னேன். அதை இ.பி.எஸ்.,சுடன் ஒப்பிடுகிறபோது, அவர் நேர்வழியிலே மக்களுடைய தீர்ப்பை பெற்று முதல்வராக வரவில்லை, குறுக்கு வழியில் வேறு விதமாக, சசிகலாவின் காலைத்தொட்டு குறுக்கு வழியில் வந்தார். அந்த அரசியல் குழந்தை இப்படித்தான் வந்தது என்றும், இருவரையும் அரசியல் குழந்தையாக உவமைப்படுத்தி, உருவகப்படுத்தி நான் பேசிய பேச்சுகளின் இரண்டு மூன்று வரிகளை மட்டும் ஒட்டியும், வெட்டியும் எடுத்து நான் ஏதோ முதல்வர் மீது அவதுாறாக பேசிவிட்டேன் என்று சித்தரிக்கபடுகிறது.

நான் வந்து ஒரு கட்சியில் பொறுப்புள்ள ஒரு பதவியில் இருக்கிறவன். முன்னாள் கேபினட் அமைச்சராக இருந்தவன். முதல்வரை அவதுாறாக பேச வேண்டுமென்றோ, அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்றோ எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. நான் பேசியது எல்லாம் அரசியலில் அவர்களுக்கு இருக்கிற உயரம், அவர்களுக்கு இருக்கிற ஆளுமைக்கான ஒப்பீடு. இந்த இரண்டு ஆளுமைக்கான ஒப்பீட்டை இரண்டு குழந்தைகளாக, ஒரு ஆரோக்கியமான குழந்தை, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்ற குழந்தை என்ற பொருளில் பேசினேனே தவிர, அதற்காக அந்த இரண்டு வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு நான் ஏதோ அவரை தனிப்பட்டமுறையில் அவரது பிறப்பை கொச்சைப்படுத்திவிட்டேன் என்று பேசிவது, எடுத்துப்போடுவது முற்றிலும் தவறானது. எனக்கு அந்த எண்ணம் சிறிதும் இல்லை. அவ்வளவு தரக்குறைவாக நான் நடந்து கொள்ளவும் மாட்டேன். அப்படிபட்ட செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என உங்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் விமர்சனம் என்பது வேறு, முதலமைச்சர் என்ற முறையில் அவரை நான் மதிக்கிறேன். அவருடைய மாண்புக்கு எந்த சின்ன சேதாரம் கூட தர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசவில்லை. தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., தலைமை புகார் கொடுத்தால் சட்டப்படி சந்திப்போம் என்றும், தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!