Chief Minister M.K.Stalin laid the foundation stone of Perambalur Government College at a cost of Rs 4 crore and transformer service at Mangalamedu substation at a cost of Rs 1.79 crore.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலமாக, குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மங்களமேடு துணை மின் நிலையத்தில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள 16 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றி சேவையினை பயன்பாட்டிற்கும் கொண்டு வந்தார்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் கற்பகம், குரும்பலூரில் புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தினைப் பார்வையிட்டு, பணிகளை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி, பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 110/33-22-11 மங்களமேடு துணை மின் நிலையத்தில் ரூ.179.220 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள ஒரு 1X16 எம்.வி.ஏ 110/33 கிவோ திறன் மின்மாற்றி பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றி அமைப்பதால் குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்படும். மேலும், திருமாந்துறை லெப்பைக்குடிக்காடு, வடக்கலூர், பெண்ணகோணம், கழனிவாசல், ஆடுதுறை, ஒகளுர், புதுப்பேட்டை, அத்தியூர், அகரம்சீகூர், அந்தூர், நன்னை, வேப்பூர், குன்னம், ஓலைப்பாடி, அத்தியூர், குடிக்காடு, எழுமூர், கல்லம்புதூர், பரவாய் ஆகிய கிராமங்களுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். 13,105 மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், மின்வாரிய பணியாளர்கள், பெரம்பலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.