Chief Minister’s Breakfast Scheme: Perambalur Collector Inspects Food Quality!

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் செஞ்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக உணவு தயாரிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் தரமாக உள்ளதா என கலெக்டர் கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 21.08.2023 அன்று இத்திட்த்தின் சோதனை முயற்சி, இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள தொடக்கப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகள், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை என மொத்தம் 263 பள்ளிகளில், 16,020 மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒரு சத்தான உணவு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. திங்கள் கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை கோதுமை ரவா கிச்சடி- காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல்-காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி- காய்கறி சாம்பார் ஆகியவை வழங்கப்படவுள்ளது.

காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கும் பணிகள் காலை 5.45 மணி முதல் 6.00 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். 8 மணிக்குள் உணவு சமைத்து முடித்து, 8.45 மணிக்குள் மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எத்தனை மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது என்ற விபரத்தை பிரத்தேயக செயலி மூலமாக பதிவேற்றம் செய்திட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் முறையாக உணவு சமைக்கப்படுகின்றதா, குறித்த நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறப்படுகின்றதா, உணவு சுவையாக தரமாக உள்ளதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு, எரிவாயு உருளை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சி செஞ்சேரி நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, ரவை, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்தும், சமையலுக்காக புதிதாக வழங்கப்பட்டுள்ள பாத்திரங்கள் உறுதியாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அப்பள்ளி மாணவர்களுக்காக சமைக்கப்பட்டிருந்த சத்துணைவின் தரம் குறித்தும் கலெக்டர் சாப்பிட்டு பார்த்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி நிறைவேற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் சிறப்புமிக்க இத்திட்டத்தை எந்தவித குறைபாடும் இல்லாத வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி நிறைவேற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!