Child marriage, violence against women? Perambalur Collector gave cell phone number to students!

தேசிய குடற்புழுநீக்க நாள் தொடர்பாக மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கற்பகம் தலைமையில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பின்னர் தெரிவித்ததாவது:

சுத்தமற்ற குடிநீரை குடிக்கும்போதும், சுகாதாரமில்லாத இடங்களுக்கு செருப்பு அணியாமல் சென்று வரும்போதும் உடலுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள குடற்புழு நீக்க மாத்திரை அரசால் வழங்கப்படுகின்றது. 1 முதல் 19 வயதிலான அனைவருக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிலான பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்படுகிறது.

1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ளவர்களுக்கு பள்ளிகளிலும் இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும் வீடுவீடாக சென்று தகவலளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உதவுகிறது. குடற்புழு நீக்க மாத்திரையினை வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 1,71,590 குழந்தைகள் மற்றும் 45,034 பெண்கள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊரில் அல்லது உங்கள் தெருவில் 21 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்தோ, வன்கொடுமை நிகழ்வது குறித்தோ உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் தையரியமாக அதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இதுகுறித்த தகவலை யாரிடம் தெரிவிப்பது, தகவல் சொல்பவரைப்பற்றி வெளியில் தெரிந்துவிடுமோ என்ற சந்தேகங்கள் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு தகவல் தெரிந்தால் தைரியமாக மாவட்ட ஆட்சித்தலைவரான என்னிடமே அலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். எனது அலைபேசி எண் 94441 75000 ஆகும். அனைவரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்து இரண்டு முறை தனது அலைபேசி எண்ணை மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் படித்து காண்பித்தார்.

மேலும் மாணவச் செல்வங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லுாரி மாணவ மாணவிகளுக்கும் தெரியும் அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் அலைபேசி எண்ணை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மருத்துவப் பணிகளுக்கான துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!