Clash between two parties near Perambalur; Scythe cut! Car glass breakage! Road block!!
பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வசந்தா (52), நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், இவரது வீட்டிற்குள் தெருநாய் ஒன்று
நுழைந்து விட்டது. அதன் மீது வசந்தா தண்ணீர் ஊற்றி வெளியே விரட்டியுள்ளார். அதற்கு எதிர் வீட்டில் வசிக்கும் அன்பழகன் எதற்காக நாயை விரட்டுகிறீர்கள் என கேட்டதில், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு வசந்தாவின் தம்பிகள் தேவர், ரவி வசந்தாவின் மகன் ரமேஷ், சித்தப்பா மகள் மோனிஷா ஆகியோர் நேற்று மாலை 4.00 மணிக்கு அன்பழகனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அன்பழகனுக்கு ஆதரவாக அவரது தம்பி அருள்குமார் வந்துள்ளார். இதில் அருள்குமாரை வசந்தா தரப்பினர் தாக்கியதில் அருள்குமாருக்கு தலை, கை, கால்களில் ரத்த காயம் ஏற்படவே அருகில் உள்ள அம்மாபாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து, தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வசந்தா தரப்பினர் தாங்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் பின்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விசாரித்துக் கொள்ளலாம் என கூறியதால், போலீசார் கூட்டத்தை கலைப்பதற்காகவும், அமைதி ஏற்படுத்தவும், அவர்களை காரில் அனுப்பி உள்ளனர். இத்தகவலை தெரிந்து கொண்ட அன்பழகன் அம்மாபாளையம் பேருந்து நிலையம் அருகில் காரினை வழிமறித்துள்ளார். இதில், மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அன்பழகனுக்கு ஆதரவாக முத்து மகன் ஜீவா (22), லாடபுரம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் கார்த்தி (24), அன்பழகனின் தந்தை அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவே இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், அன்பழகனுக்கு கழுத்தில் வெட்டு காயமும் ஜீவாவிற்கு வலது கணுக்காலில் ரத்த காயமும் ரமேஷிற்கு தலையில் ரத்த காயமும் ரவிக்கு இடது கையில் ரத்த காயமும் ஏற்பட்டுள்ளது காயம் பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டனர்.
பின்பு அன்பழகன் தந்தை அண்ணாதுரை என்பவரது தலைமையில் 10 பெண்கள் உள்பட 50 நபர்கள் அன்பழகனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் – துறையூர் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். பின்பு வசந்தா தரப்பை சேர்ந்த நபர்கள் வந்த காரை அடித்து நொறுக்கி கவிழ்த்து விட்டனர். இதனால், துறையூர் -பெரம்பலூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இரு தரப்பினரையும் போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெருநாய்க்காக கலவரமான இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.