Coaching classes for government school students to face competitive exams easily: Perambalur Collector sure to conduct course!


அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

பெரம்பலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் வார இறுதி நாட்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் பெரம்பலூர் ஒன்றியத்திலிருந்து 49 மாணவர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்திலிருந்து 65 மாணவர்களும், ஆலத்தூர் ஒன்றியத்திலிருந்து 31 மாணவர்களும், வேப்பூர் ஒன்றியத்திலிருந்து 51 மாணவர்களும் ஆக கூடுதலாக 196 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இப்பயிற்சிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் பெரம்பலூர் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு பாடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளை மாவட்டத்தில் உள்ள 138 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகிறார்கள்.

உங்களுக்கு இந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்படும் அறிவுரைகளை, நுணுக்கங்களை கற்று போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துக்கின்றேன். நான் அரசுப்பள்ளியில் தான் படித்தேன். முதுகலை உயிரியல் படித்துள்ளேன். உங்களுக்கு உயிரியில் பாடப்பிரிவிற்கான வகுப்புகளை விரைவில் நானே வந்து எடுக்கிறேன். படிப்பில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். விரைவில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நீங்கள் அனைவருக்கும் உணர்த்தும் வகையில், நன்கு படித்து நீட் தேர்வினை எளிதில் எதிர்கொண்டு அனைவரும் மருத்துவர்களாக வர வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன். கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது, என தெரிவித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!