cobra in Perambalur Tea shop: fire fighters caught
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை ஒன்றில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட டீ கடையில் 9 மணியளவில் ஏராளமானோர் டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் டீ கடைக்குள்இருந்து திடீரென உஷ், உஷ் என ஒருவிதமான சத்தம் கேட்டது.
சத்தம் எங்கிருந்து வருகிறது என டீ கடை உரிமையாளர் தேடி பார்த்த போது, கடையினுள் நல்ல பாம்பு ஒன்று இருப்பதையறிந்து பாம்பு, பாம்பு என சத்தம் போட்டவாரே வெளியே ஓடி வந்தார். இதனை கண்டு, டீ சாப்பிட்டு கொண்டிருந்தவர் டீ கடையை விட்டு அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.
இதுபற்றி தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டீ கடையினுள் இருந்த 10 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
நல்ல வேளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினுள் ஏறாமல் சென்றது என பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் நிம்மதியுடன் சென்றனர்.