Collector Karpagam Inspection in Milk Producers Cooperative Society near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம் அயிலூர் குடிக்காடு பகுதியிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, தினசரி எத்தனை நபர்கள் பால் கொள்முதல் செய்கிறார்கள், எவ்வித கலப்படமும் இல்லாமல் தரமான பால் கொள்முதல் செய்கிறார்களா, பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சுத்தமாக உள்ளதா எனவும், ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக எவ்வளவு வழங்கப்படுகிறது, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்வது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
பின்னர் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கழிவுநீர் கால்வாய், புதிய சாலை வசதி வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை, புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, தெற்கு மாதவி உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிடிஓ அறிவழகன், ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.