இன்று காலை நடந்த விபத்தில், பெரம்பலூரை சேர்ந்த, ஒரே தனியார் கல்லூரியின் 3 பேருந்துகள் போட்டா போட்டியில் முந்திக் கொண்டு , அரியலூர் மற்றும் குன்னம் பகுதிகளில் இருந்து பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவைகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது சித்தளி பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று ஏற்படுத்திய விபத்தில், சாலையின் அருகே உள்ள கம்பத்தில் மோதிய பின்னர், அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் குன்னம் அரசு பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவிகள் மீது மோதியதில் 5 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.அதில் சித்தளி கிராமத்தை, 9ம் வகுப்பு படிக்கும் கமலமூர்த்தி மகள் காயத்திரி என்ற மாணவி மட்டும் தலையில் பலத்த அடிப்பட்டதால், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டார். பலத்த காயமடைந்த மற்ற மாணவிகளான, அது ஊரைச் சேர்ந்த குமார் மகள் சரண்யா, செந்தில்குமார் மகள் அகல்யா, கிருஷ்ணமூர்த்தி மகள் செந்தாமரை, காமராஜ் மகள் ராதிகா, பொன்னுசாமி மகள் கோமதி ஆகிய 4 மாணவிகளும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், கிராம பொதுமக்கள், வழிபோக்கர்கள் திரண்டு, விபத்திற்கு காரணமான பேருந்துகளின் கண்ணாடிகளை ஆத்திரம் தீர அடித்து உடைத்ததனர். பேருந்துகளின் ஓட்டுனர்கள் தப்பி ஓடி தலைமாகி விட்டனர். மேலும், பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போர்க்களம் போல் அப்பகுதி பரபரப்பாக காட்சியளித்தது. மேலும், இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்ததுடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட கலெக்டர் வே.சாந்தா உள்ளிட்ட வருவாய் மற்றும், பள்ளிக் கல்வித்துறையினர் காயமடைந்த மாணவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலை நேரம் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பானது. விபத்திற்குள்ளான பேருந்துகளில் வந்த மாணவர்களை பொதுமக்கள் உறவினர்கள் மீட்டு பாதுகாப்பாக வீடுகளுக்கும், பள்ளிகளுக்கும் அழைத்து சென்றனர். பின்னர், பாதிக்பபட்ட மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் விபத்திற்கு உரிய நியாயம் வழங்க கோரி, பெரம்பலூர் – துறையூர் சாலையில், அவ்வழியாக வந்த பேருந்துகளை மறித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், பின்னர், கலைந்து சென்றனர்.