Community baby shower for pregnant women: Minister Sivasankar organized it in Perambalur, Kunnam!
பெரம்பலுார் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலெக்டர் க.கற்பகம், தலைமையில் நடத்தி வைத்தார்.
பெரம்பலுார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 250 பயனாளிகளுக்கும் , குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 பயனாளிகளுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்புத் திட்டம் ஒரு சிறப்பான திட்டமாகும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து மாதம் என்பதால் கர்ப்பிணித்தாய்மார்கள், வளரிளம் பெண்களுக்கு ஆரோக்கியமான உணவுமுறைகள் குறித்த விழிப்புணர்வு பெரம்பலுார் மாவட்டம் முழுவதும் குழந்தை வளர்ச்சித் திட்ட பணியாளர்களால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகின்றது. ஏழை,எளிய வீட்டு கர்ப்பிணிப்பெண்களுக்கு அரசின் செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணிற்கும் அவர்களது வீட்டில் எவ்வளவு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுமோ அதைவிடச் சிறப்பாக, அரசின் சார்பில் நடத்தப்படுகின்றது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கைநிறைய வளையல் அணிவித்து, அவர்களுக்கு உறவினர்கள் கூடி நின்று செய்கின்ற அனைத்து சம்பிரதாயங்களும் முறையாக செய்யப்பட்டு, 5 வகை கலவை சாதம் வழங்கி தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக சமுதாய வளைகாப்பை கொண்டாடி வருகின்றது.
அதனடிப்படையில், பெரம்பலுார் மாவட்டத்தில் இன்று 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரம்பலுார் மாவட்டத்தில் மொத்தம் 1300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கர்ப்பினி பெண்களுக்கு 5 வகை கலவை சாதங்களை அமைச்சர், கலெக்டர், பெரம்பலுார் எம்.எல்.ஏ ஆகியோர் பரிமாறினர். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மூலம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் குழந்தைகள் மையத்தில் சேரும் குழந்தைகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சீருடைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாத்துரை(பெரம்பலுார்), ராமலிங்கம்(வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை(வேப்பூர்), மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், கருணாநிதி, மகாதேவிஜெயபால், அருள்செல்வி மற்றும் குழந்தை வளர்ச்சித்திட்ட வட்டார அலுவலர்கள், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, வக்கீல் என்.ராஜேந்திரன் பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: https://dsmatrimony.net/