Confiscated money, items can be obtained by giving the relevant documents: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தலில் அதிகப்படியான பணப் புழக்கத்தைத் தவிர்க்கும் நோக்கிலும், தேர்தல் சட்ட விதிகளுக்குப் புறம்பாக பணம் உபயோகப்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் பயணம் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது பணம் எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும் எனவும், தேர்தல் பறக்கும் படையினர் அல்லது கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ. 50,ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம் மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கு மேற்படும் மதிப்பிலான பொருட்கள் தேர்தல் விதிகளின் படி, தேர்தல் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லது பொருட்களை திரும்பப் பெற மாவட்ட அளவிலான கைப்பற்றுகை விடுவிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் , மாவட்ட திட்ட இயக்குனர் எல்.கே.லோகேஸ்வரி, கருவூல அலுவலர் வசந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஸ்ரீதர், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லது பொருட்களைத் திரும்பப் பெற, மேற்கண்ட கைப்பற்றுகை விடுவிக்கும் குழுவிற்கு பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மனுதாரர் அளிக்கும் ஆவணங்கள் மற்றும் தேர்தல் விதிகளின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லது பொருட்கள் தேர்தல் தொடர்பான காரணத்திற்காக பயன்படுத்த கொண்டு செல்லப்படவில்லை என்பதை உறுதி செய்தபின், இதன் மீது வழக்கு அல்லது சட்ட பூர்வ நடவடிக்கை ஏதும் தொடரப்படவில்லை எனில், அத்தொகை அல்லது பொருட்கள் மேற்கண்ட குழுவால் விடுவிக்கப்படும்.

ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட தொகை அல்லது மதிப்பிலான பொருட்கள் வருமான வரித்துறை மற்றும் இதர துறையினரால் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு அத்துறையின் ஆணையின் பேரில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!