Consultative meeting on employment opportunities for employers in private companies
தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு வழங்குவது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தை தொடக்கி வைத்து மகளிர் திட்ட அலுவலர் கு.செல்வராசு பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகளின் நலவாழ்விற்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. மேலும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திடவும் சில தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து வருகின்றன.
எனவே மற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றிட தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக மகளிர் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக அளிக்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளையும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காமல் வெற்றிபெறும் வரை போராட வேண்டும், என பேசினார்.
அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பல்வேறு தனியார் நிறுவனங்களின் அலுவலர்களுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட அவர்களுக்கு தேர்வான அடிப்படை திறமைகள் குறித்தும், தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்திட தடையாக உள்ள காரணிகள் குறித்தும் தனியார் நிறுவன அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், புதுவாழ்வுத்திட்ட மாவட்ட மேலாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுடன் பல்வேறு தனியார் நிறுவன அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.