Corona: Half the action is useless – an immediate need for a full curfew! PMK Anbumani

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தொடர்பாக உலக அளவிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் கிடைக்கும் தகவல்கள் அச்சத்தையும், பதைபதைப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. தமிழகத்தில் நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் சூழலுக்கு ஏற்ற வேகம் இல்லாதது கவலையளிக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவது அனைவரின் கண்முன் தெரிகிறது. நேற்றிரவு நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 397ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு மூவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு நாட்களில் மொத்தம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது ஒரு மருத்துவனாக என்னை கவலையும், பதற்றமும் அடையச் செய்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை குறித்து உலக வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் இன்னும் அதிர்ச்சியும், பீதியும் அளிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நோய்த்தன்மைகள், பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மைய இயக்குனரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரமணன் லட்சுமிநாராயணன், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது நிலையான சமூகப் பரவலை எட்டி விட்டதாக தெரிவித்திருக்கிறார். இன்றைய நிலையில் இந்தியாவில் குறைந்தபட்சம் 1500 பேருக்காவது கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்; இந்தியாவில் அதிகபட்சமாக 60 விழுக்காட்டினர், அதாவது 78 கோடி பேர் கொரோனா வைரஸ் நோயால் தாக்கப்படக் கூடும் என்று அவர் மதிப்பீடு செய்திருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த இந்த மதிப்பீடுகள் அதிர்ச்சியையும், கவலையையும் தரலாம். இவற்றை நம்ப முடியாமலும் போகலாம். ஆனால், இவை அனைத்தும் உண்மை. இப்படி ஒரு நிலைமை ஏற்பட வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதற்காகத் தான் நாடு தழுவிய அளவில் மூன்று வார ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். கிட்டத்தட்ட நான் கூறிய எச்சரிக்கைகளைத் தான் ரமணன் லட்சுமிநாராயணன் உறுதி செய்திருக்கிறார். சுகாதாரத்துறையை சேர்ந்த எனது நண்பர்கள் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவல் தொடர்பாக தெரிவித்த தகவல்களைக் கேட்கும் போது பயமாக உள்ளது. தமிழக அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வளவு வேகம் தேவை என்பதை தமிழக அரசு இன்று வரை புரிந்து கொள்ளவில்லை.

அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா பாதி–ப்பு நம்மை விட மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனாலும், அங்கு 31-ஆம் தேதி வரை ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஏழைக்குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்களுடன் ரூ.1,000 நிதி உதவியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவிலும் மார்ச் 31 வரை ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 87 லட்சம் குடும்பங்களுக்கு தலா 12 கிலோ இலவச அரிசி, ரூ.1500 நிதியுதவியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தில்லி, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மராட்டியம், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாவட்டங்களிலும் பகுதி ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், மக்கள் மீது அம்மாநிலங்களுக்கு உள்ள அக்கறை தமிழக அரசுக்கு இல்லை.

அதுமட்டுமின்றி, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திட்டமிட்டபடி அத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் பள்ளிக்கல்வித்துறை எதை சாதிக்கப்போகிறது என்பது தான் தெரியவில்லை. 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள். இது கொரோனா பரவுவதற்கே வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வேளையில், கூட்டமாக தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தேர்வுகளில் அவர்களின் செயல்பாட்டை பாதித்து, எதிர்கால வாய்ப்புகளை சீரழிக்கும் ஆபத்தும் உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவதால் நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் புள்ளி விவரங்களுடன் விரிவான அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு அவை கூட்டத் தொடரை ஒத்திவைக்காமல் தொடர்ந்து நடத்துவது நோய் பரவலை அதிகரிக்கச் செய்யும். பேரவைக் கூட்டத்தை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம்; நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்போது எடுக்காவிட்டால், அதன்பின்னர் என்ன செய்தாலும் பேரழிவை தடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். கொரோனாவை தடுக்க இன்றைய தேவை ஊரடங்கு தான்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் கூட புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல நடைபெறும் என்று அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் அறிவித்துள்ளன. வேகமாக நோய் பரவும் இந்த வேளையில் பேருந்துகளை இயக்குவது பயணிகளை அழைத்துச் செல்வதை விட, கொரோனா வைரசை பல ஊர்களுக்கும் கொண்டு சென்று பரப்புவதற்குத் தான் வழிவகுக்கும். அதேபோல், தமிழகத்தில் அனைத்துக் கடைகளும் திறந்திருக்கின்றன; மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது; வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இயக்குகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள போதிலும் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தேவையின்றி பள்ளிகளுக்கு வரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவை அனைத்துமே கொரோனா பரவுவதற்கு தான் வழிவகுக்கும்.

கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கு முழுமையான ஊரடங்கு தான் சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று இன்று அறிவுறுத்தியுள்ளது. மக்கள் ஊரடங்கு நேற்று அறிவிக்கப்பட்டாலும், அதை மக்கள் முழுமையாக பின்பற்றவில்லை என்றும், சமூக இடைவெளியை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மாநிலங்களில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகம் மட்டும் ஏதோ பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதைப் போன்று நினைத்துக் கொண்டு அரைகுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது எந்த வகையிலும் பயனளிக்காது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முழு ஊரடங்கு மட்டும் தான் ஒரே வழி என்பதால் உடனடியாக தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

கொரோனா வைரஸ் அச்சத்தாலும், முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படவிருப்பதாலும் அமைப்பு சார்ந்த பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. ஆகவே, பிற மாநிலங்கள் அறிவித்திருப்பதைப் போன்று தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை அரசு வழங்க வேண்டும். அத்துடன் அனைத்து வகையான கடன் தவணைகளையும் அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்; அதற்கான வட்டியை ரத்து செய்யும்படி வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!