Corona Impact: Complete curfew for few Villages in Perambalur
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றை தடுக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு குறித்து பரிசீலிக்கப்பட்டதை தொடர்ந்து லப்பைகுடிகாடு, அத்தியூர் மற்றும் துங்கபுரம் பகுதிகளில் காலை 7.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 9 மணி முதல் காலை 12.00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக நோய் தொற்று கண்டறியபட்டுள்ளதால் ஊரடங்கில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. மேலும், புதியதாக நோய்தொற்று அறியபட்ட பகுதிகளான நல்லறிக்கை, கொளத்தூர் இலுப்பைகுடி, திம்மூர், அருணகிரிமங்கலம், சில்லக்குடி, புதுவேட்டக்குடி, நன்னை மற்றும் கீழபெரம்பலூர் ஆகிய பகுதிகளில் 04.05.2020 முதல் 06.05.2020 வரை மூன்று தினங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலத்தில் அப்பகுதியை சேர்ந்த எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் வெளி நபர்களும் அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறுவோர் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாக அறிவிப்பினை மீறி கடைகள் திறந்தால் உடனடியாக சீல் வைக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் முன்னதாக அறிவிப்பு செய்யப்படும். எனவே பொதுமக்கள் நோயின் தீவிரம் அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றி நோய் தொற்றிலிருந்து தங்களை காத்துகொள்வதோடு பெரம்பலூர் மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றிட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு துணையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளார்.