Corona Siddha Special Treatment Center at Kaulpalayam: Collector V.Shantha opens! 

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையத்தில், கொரோனா (கோவிட் 19) சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் வே. சாந்தா இன்று காலை திறந்து வைத்து, சிகிச்சை அளிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு, பல்வேறு தடுப்பு பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நமது பாரம்பரியமான சித்தா சிகிச்சை மூலம் சிகிச்சையளித்து கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கியதன் அடிப்படையில், தமிழகத்தில் ஏற்கனவே 19 இடங்களில் சித்தா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கவுள்பாளையத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ள கோவிட் 19 நோயாளிகளில் பிற நோய்களினால் தொந்தரவு இல்லாத நோயாளிகளை தேர்வு செய்து சிறப்பு சித்த மருத்துவ மையத்தில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட உள்ளது. 200 படுக்கைகள் கொண்ட 100 குடியிருப்பிற்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, படுக்கை விரிப்பு, தலையனை மற்றும் சி.சி.டி.வி. கேமரா, மைக்குகள் ஸ்பீக்கருடன், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சில்வர், தட்டு, டம்ளர், சோப்பு, எண்ணெய், பல்பொடி, சோப்பு திரவம், துலக்க சோப்பு, கிரிமிநாசினி போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினசரி சுழற்சி முறையில் 3 செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிவார்கள். காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரையிலும், இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரையிலும் 2 மருத்துவர்கள் வீதம் சுழற்சி முறையில் பணிபுரிவார்கள். அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைத்திடவும், காய்ச்சல் பரிசோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான கருவிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு இஞ்சி டீ, 7 மணிக்கு கபசுரக் குடிநீர், 8 மணிக்கு சிற்றுண்டியும், மதியம் 12.30 மணிக்கு மதிய உணவும், மாலை 6.00 மணிக்கு கபசுரக் குடிநீரும், இரவு 7.30 மணிக்கு இரவு உணவு மற்றும் 9.00 மணிக்கு மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பால் வழங்கப்படும்.

தினமும் காலை 10.30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று கீரை வடையுடன் சுக்குமல்லி காபியும், திங்கள், புதன், வௌ;ளி ஆகிய நாட்களில் ஆரோக்கிய இயற்கை பானம் மற்றும் காய்கறி சாலட்டும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பழக்கலவையுடன் நெல்லிக்காய் சாறும் வழங்கப்படும். அதேபோல் தினமும் மாலை 4.00 மணிக்கு ஞாயிறு, புதன் ஆகிய நாட்களில் காய்கறி சூப்புடன் வேகவைத்த கருப்பு சுண்டலும், திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் தூதுவளை சூப்புடன் வேகவைத்த நிலக்கடலை சுண்டலும், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் மணத்தக்காளி சூப்புடன் வேகவைத்த கருப்பு சுண்டலும், வியாழக்கிழமையன்று முருங்கைக் கீரை சூப்புடன் வேகவைத்த நிலக்கடலை சுண்டலும் வழங்கப்படுகிறது.

இவற்றுடன் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மேற்கண்ட சத்தான உணவுகளையும், முறையாக யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை முறையாக மேற்கொண்டு தங்களை கோரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.கீதாராணி, சித்த மருத்துவர்கள் காமராஜ், விஜயன், தாசில்தார் பாரதிவளவன், பி.டிஓ ஆலயமணி, ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!