Corona vaccination camps at 193 places in Perambalur district on the 12th: Perambalur Collector!

பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் எதிர்வரும் 12.09.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று மாவட்டம் முழுவதும் 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் நடத்தப்படவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 16.01.2021 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார துறையினர் மற்றும் முன்களபணியாளர்களுக்கும், 18.02.2021 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 01.06.2021 முதல் 18 வயது முடிந்த அனைவருக்கும் என படிப்படியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 4,72,000 நபர்களில் 08.09.2021 வரை முதல் தவணையாக 2,20,914 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 50,198 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்து இது மொத்தஉள்ள நபர்களில் 47 சதவீதம் மட்டுமே. 16.01.2021 ஆம் தேதி தொடங்கி 08.09.2021 வரை 47 சதவீத நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 53 சதவீத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மெகா திட்டமாக மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களை தேர்வு செய்து மொத்தம் 193 இடங்களில் வருகின்ற 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோன தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம் நடைபெற உள்ளது.

மேலும், தடுப்பூசி முகாமிற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. தடுப்பூசி முகாம்களை கண்காணித்து கவனிக்கும் பொருட்டு 13 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் முதல் தவணை தடுப்பூசியினையும், முதல்தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாட்கள் கடந்தவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியினையும் அவரவர் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு சென்று செலுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், இணை இயக்குநர் மருத்துவத்துறை செல்வராஜ், சுகாதரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், சப்-கலெக்டர் நிறைமதி, நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், மருத்துவர்கள், சுகாதார துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!