Corona vaccine in 198 camps for 22,000 people on Sunday: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கொரானா தடுப்பூசி செலுத்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.09.2021) அன்று மாவட்டம் முழுவதும் 198 சிறப்பு முகாம்கள் மூலம் 22 ஆயிரம் நபர்களுக்கு 3ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 165 இடங்களில் சிறப்பு முகாம்கள் என மொத்தம் 198 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,200 நபர்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, 18 வயதிற்கு மேற்பட்ட, கொரோனா தடுப்பூசி போடாத அனைவரும் மறக்காமல், மறுக்காமல் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, நமது பெரம்பலூர் மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.