Create a Namakkal District Aavin : Chief Minister Edappadi Palinasamy initiated
சேலம், நாமக்கல் மாவட்ட ஆவினை இரண்டாகப் பிரித்து நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
சேலம், நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களை ஒருங்கிணைத்து சேலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) செயல்பட்டு வந்தது. தற்போது இதை இரண்டாகப் பிரித்து நாமக்கல் மாவட்டத்திற்கு தனியாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்றியத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 65 லிட்டம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் துவக்க விழா வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியத்தை துவக்கி வைத்தார். இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் தலைமை வகித்துப் பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் தமிழக கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி சுந்தரம், எம்எல்ஏக்கள் நாமக்கல் பாஸ்கர், சேந்தமங்கலம் சந்திரசேகரன், திருச்செங்கோடு பொன்சரஸ்வதி, நாமக்கல் ஆவின் சேர்மன் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.