Credit to the economically disadvantaged minority; Perambalur Collector V. Santha Information
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தனிநபர் தொழில் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் ஆகிய கடன்கள் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம். சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுகடன் பெற குழுவில் குறைந்தபட்சம் 60 சதவீத சிறுபான்மையினர் இருத்தல் அவசியம். இதர 40 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பினர் இடம்பெறலாம்.
மேற்படி கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000-மும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 1,20,000-மும் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், பெரம்பலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.