Daily vegetable procurement market for farmers near Perambalur: Entrepreneur’s venture!;
பூலாம்பாடியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மொத்தக்கொள்முதல் அடிப்படையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பாக டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றுவதற்கு அந்த ஊரை சேர்ந்த தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம், தலைவாசலுக்கு, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்கவும், காய்கறிகளை கொள்முதல் செய்ய வியாபாரிகளும், தினமும் சென்று வருகின்றனர்.
இதே போல் பூலாம்பாடியிலும், பெரிய அளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு,ஊரின் வளர்ச்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால் தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமாரின் சொந்த செலவில் செய்து தர தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
பூலாம்பாடியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை கோயம்பேட்டிற்கு அனுப்புவதற்கும் திட்டம் இருப்பதாககூறியிருந்தார். இந்த நிலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திரவுபதி அம்மன் கோவில் முன்பு டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் சேலம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்தும் காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர்.
அதைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமார் பேசிய போது:
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் ஆகியவற் றை பெற்று தர தனது கம்பெனி செலவிலேயே பணியாளர் நியமிக்கப்படுவார். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உங்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவர். அனைவரும் ஒரே காய்கறிகளை பயிரிடாமல் வெவ்வேறு காய்கறிகளை பயிரிட்டால் லாபம் கிடைக்கும். அக்டோபர் 25 ல் பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பூலாம்பாடி கடம்பூர் அரசடிக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.