விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் சாவு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி நீர்த்தேக்ககத்தில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.
தர்மபுரியை சேர்ந்தவர் முகேசன் மகன் ராஜ்குமார் (21). இவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி எம்.ஏ முதலாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.
இந்நிலையில், அதே கல்லூரியில் பயிலும் அவரது நண்பர்களான லெனின், ஜெகன், சில்வியா ஆகியோருடன், பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாளையத்தை சேர்ந்த பவுல் ஆரோக்கியதாஸ் மகள் பெமீனா (இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார்) வீட்டுக்கு இன்று வந்தனர்.
இதையடுத்து, இன்று மாலை பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி அணையை பார்வையிடுவதற்காக பவுல் ஆரோக்கியதாஸ், பெமீனா மற்றும் மேற்கண்ட மாணவ,மாணவியர் 4 பேரும் சென்றனர். விசுவகுடி நீர்த்தேக்கத்தில் தற்பொது 23 அடி உயரம் தண்ணீர் உள்ளது
பின்னர், அணையில் இறங்கி அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ராஜ்குமார் மட்டும் அணையின் உள்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
திடீரென ஆழம் அதிகம் உள்ள பகுதிக்குள் ராஜ்குமார் சென்றுவிட்டார். நீச்சல் தெரியாததால் காப்பாற்றுங்ள் காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டார். அருகில் நீச்சல் தெரிந்தவர்கள் ஓடிச்சென்று காப்பாற்றுவதற்குள் நீரில் மூழ்கி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் ராஜ்குமார் உடல் மீட்கப்பட்டு, உடல் ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியிலுள்ள ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.