Delhi universities and colleges should strengthen the Tamil industry! Anbumani MP

தருமபுரி எம்.பி அன்புமணி விடுத்துள்ள அறிக்கை:

தில்லியில் உள்ள இரு கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாததால் தமிழ்த்துறை மூடப்பட்டு விட்ட நிலையில், தில்லி பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாததால் அங்கும் தமிழ்த் துறை மூடப்படும் ஆபத்து இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர்கள் அதிகம் வாழும் தில்லியில் தமிழ் படிக்க முடியாத நிலை ஏற்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் சான்றிதழ் படிப்பில் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வு வரை நடத்தப்படுகிறது. ஆனால், அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தமிழ் பேராசிரியர்களில் 4 பேர் கடந்த 8 ஆண்டுகளில் ஓய்வு பெற்று விட்டனர். அப்பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட போதிலும், இன்று வரை புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஓய்வு பெற்றவர்கள் தவிர மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ள பேராசிரியர்களும் அடுத்த சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ளனர். அதனால், புகழ்பெற்ற தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மூடப்படும் ஆபத்து இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

தில்லியில் தமிழர்கள் அதிகம் பயிலக்கூடிய லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டதால் அக்கல்லூரிகளில் செயல்பட்டு வந்து தமிழ்த்துறைகள் மூடப்பட்டு விட்டன. வெங்கடேஸ்வரா கல்லூரி, தயாள்சிங் கல்லூரி ஆகியவற்றிலும் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் பேராசிரியர்கள் ஓய்வு பெறவிருப்பதால் அக்கல்லூரிகளிலும் விரைவில் தமிழ்த் துறைகள் மூடப்படக்கூடும் எனத் தெரிகிறது.

தில்லியில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் தமிழ் மொழியில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக உள்ளது. அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியது தில்லி பல்கலைக்கழகத்தின் கடமையாகும். ஆனால், தமிழ் பேராசிரியர்களை நியமித்து தமிழ் கற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தில்லி பல்கலைக்கழகம் மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழர்கள் தமிழ் படிப்பதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள பல்கலைக்கழகங்களும், தமிழர்களும் செய்துள்ளனர். ஆனால், இந்தியாவின் தலைநகரான தில்லியில் தமிழர்கள் தமிழ் படிக்க முடியாத நிலை நிலவுவது உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயமாகும்.

இத்தகைய தருணங்களில் தமிழக அரசு தலையிட்டு தில்லியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ் கற்பிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் கூட கடந்த 2007&ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதி உதவியுடன் தமிழ்த் துறை தொடங்கப்பட்டது. அதேபோல், தில்லி பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு தொடர்பு கொண்டு நிரப்பப்படாத தமிழ் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவும், தமிழ் மொழி ஆராய்ச்சியை விரைவுபடுத்த கூடுதல் பேராசிரியர் பணியிடங்களையும் ஏற்படுத்தச் செய்ய வேண்டும். ஏற்கனவே, தமிழ்த்துறை மூடப்பட்ட லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் தமிழ்த்துறையை புதிதாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அந்தக் கல்வி நிறுவனங்கள் நிதியுதவி கோரும் பட்சத்தில் அதையும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அத்துடன், ஜவகர்லால் பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா கல்லூரி, தயாள்சிங் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் தமிழ் பேராசிரியர்கள் இல்லை. தில்லியில் உள்ள தமிழ் மாணவர்கள் தமிழில் பயில ஆர்வமாக இருக்கும் நிலையில், அவர்களின் தமிழ் மொழிக் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்துறையை வலுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!