Demonstration in Namakkal denounces the sale of drugs online; Shops shutters

நாமக்கலில் ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடை அடைப்பு நடைபெற்றது.

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கண்டித்து ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் மருந்து கடைகள் அடைப்பில் ஈடுபட்டு, கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் மோகன் வரவேற்றார்.

இது குறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் தெரிவித்ததாவது:

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க வரைவு அறிக்கை கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மருந்து வணிகம் கூடாது. ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது ஆகும்.

டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். ஆன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும்.

ஆன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதி அளிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து அகில இந்திய அளவில் ஒரு நாள் கடை அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கடையடைப்பு போராட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 8 லட்சம் கடைகள் அடைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இருக்கின்றன. இதில் ஆஸ்பத்திரிக்குள் உள்ள 5 ஆயிரம் கடைகளை தவிர, மீதம் உள்ள 30 ஆயிரம் கடைகளும் அடைக்கப்பட்டு தான் இருக்கும்.மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 650 மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் மோகன், பொருளாளர் கோபிரத்தினம் உள்ளிட்டநாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!