Development projects in the vicinity of Rs .2.30 crore Sentamankalam: Namakkal collector probe

நாமக்கல் மாவட்ட சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொட்டணம், பச்சுடையாம்பாளையம், வாழவந்திகோம்பை, பொம்மசமுத்திரம், நடுக்கோம்பை ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொட்டணம் பஞ்சாயத்தில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காளியம்மாள் என்பவரின் வீட்டினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.11 இலட்சம் மதிப்பீட்டில் கசிவுநீர்க்குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், நைனாமலை வெள்ளவாரி ஓடையில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பணியினையும், ரூ.20,000 மதிப்பீட்டில் கால்நடைகளுக்கான நீர் அருந்தும் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, வாழவந்திகோம்பை பஞ்சாயத்து பகுதியில் பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினையும், எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் காரவள்ளி சாலை முதல் அரப்பக்காடு சாலை வரை பாலம் அமைக்கபட்டு வரும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

மொத்தம் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, சேந்தமங்கலம் பிடிஓக்கள் பத்மநாபன், சேகர், ஒன்றியப்பொறியாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!