Deworming Pill Camp; Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் கட்டமாக 09.02.2024 அன்றும், இரண்டாம் கட்டமாக 16.02.2024 அன்று விடுபட்ட குழந்தைகளுக்கும் முகாம் நடைபெற உள்ளது.
இச்சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதிலான அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகிறது. 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்கவுள்ளார்கள்.
இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.
அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் 45,034 பெண்கள் பயனடைவார்கள். மேலும், பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் தன் சுத்தம் பற்றியும், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் பற்றியும், கை கழுவும் முறைகள் பற்றியும் நலக்கல்வி வழங்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.