Disconnect the motor can be made to keep the water – District Administration
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
வறட்சி காரணமாக தற்போது உள்ள சூழ்நிலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் ரோஸ் நகர், அசோக் நகர், சோமண்டா புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகின்றதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
ரோஸ்நகரில் 2லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியினையும், அசோக் நகரில் குடிநீர்த் தேவைக்காக ரூ.30லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கிணறுவெட்டும் பணிகளையும், அதே பகுதியில் பயன்பாட்டில் உள்ள 60,000 லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியினையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சிப் பணியாளர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்றும் நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் சோமண்டா புதூரில் உள்ள தனியார் கிணற்றிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீரைக் கொண்டு வந்து அசோக் நகரில் உள்ள தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியில் சேர்க்கும் வகையில் குழாய்கள் பதித்து குடிநீர் கொண்டுவரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சோமண்டாபுதூரில் உள்ள தனியார் கிணறையும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பார்வையிட்டார்.
வறட்சி நிலவும் காலத்தில் குடிநீரை தட்டுப்பாடு இல்லாத வகையில் பொதுமக்களுக்கு குடிநீரை விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் பொதுமக்களில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் வைத்தும், குடிநீர் குழாய்களிலிருந்து தனியாக பைப் மூலம் தனியார் வீடுகளுக்கு கொண்டு செல்லும் வேலைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவோர் மீது சட்டத்திற்குட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்மந்தப்பட்டவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி நகராட்சி ஆணையர் முரளியிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நகராட்சிக்குட்பபட்ட 5வது வார்டு கணேசா காலணி, மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் விநியோகம் செய்யப்படும்போது நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியது கண்டறியப்பட்டு 3 வீடுகளிலிருந்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.