Disrupt the Tik tok! Leads to social degeneration !! The PMK founder Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. எந்த வித ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் டிக்டாக் செயலி செயல்படும் விதமும், அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையை தொலைப்பதும் கவலையளிக்கிறது.

முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகமான டிக்டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீனத்தைச் சேர்ந்த பைட்-டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியில் 15 வினாடிகளுக்கு பயனாளிகள் தங்களின் கருத்தை படம் பிடித்து வெளியிட முடியும். டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப் பட்ட போது, மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 15 வினாடிகளில் வெளியுலகுக்கு தெரியப் படுத்துவதற்கு உதவுவது தான் இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதைப் போன்று, தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக்டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டிக்டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன.

டிக்டாக் செயலி அதன் பயனாளிகளிடம் ஒரு விதமான போதையை ஏற்படுத்துகிறது. ஒரு பதிவுக்கு ஒரு முறை ஆயிரம் பேரிடமிருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை அதை இரு மடங்காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூடுதலாக ஆபாச சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர். இது தவறு; இது சொந்த வாழ்க்கையையும், சமூகத்தையும் சீரழிக்கும் என்ற குற்ற உணர்ச்சி கூட டிக்டாக் செயலியின் அடிமைகளுக்கு புரிவதில்லை என்பது தான் மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கு உரிய விஷயமாகும்.

டிக்டாக் செயலி மூலம் பயனுள்ள தகவல்களையும் பரப்ப முடியும். சிலர் சமுதாயத்துக்குத் தேவையான தகவல்களை இச்செயலி மூலம் பரப்புகின்றனர். ஆனால், அவர்களின் அளவு ஒரு விழுக்காட்டைக் கூடத் தாண்டாது. இந்த செயலியை 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம். டிக்டாக் செயலியை இந்தியாவில் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 40%-க்கும் கூடுதலானவர்கள் பதின்வயதினர். அவர்களிடம் டிக்டாக் செயலியின் உள்ளடக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்; அதனால் சமூகத்தில் எத்தகைய விளைவுகள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி, டிக்டாக் செயலி மாணவர்களிடம் கவனச் சிதறலை ஏற்படுத்தி கல்வியை பாதிக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் டிக்டாக் செயலி மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலி குழந்தைகளுக்கும், பதின்வயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இந்தோனேஷிய அரசு அதை தடை செய்தது. பின்னர் ஆபாச உள்ளடக்கங்கள் இடம் பெறாது என பைட்-டான்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து தான் தடை நீக்கப்பட்டது. அமெரிக்காவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று அங்குள்ள இணைய பயன்பாடு கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது. பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டிக்டாக்கின் உள்ளடக்கங்கள் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

இளைய தலைமுறையினர் பதின்வயதில் இத்தகைய கவனச் சிதறல்களுக்கும், திசை மாறுதல்களுக்கும் உள்ளானால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதைத் தடுக்க டிக்டாக் செயலியை கடுமையான கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உள்ளாக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக டிக்டாக் செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கும், இளையதலைமுறையினருக்கும் பெற்றோர் எடுத்துக் கூறி அவர்களை இந்த போதையிலிருந்து மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!