Disruption to the public near Perambalur: Road stalling to allow sand tanks.
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில், வெள்ளாற்று குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை மறித்து சாலை மறியல் நடந்தது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி நடைபெற்று வருகிறது. இந்த மணல் குவாரிக்கு கடலூர் – திட்டக்குடி வட்டம், அரியலூர்- செந்துறை வட்டம், பெரம்பலூர் – குன்னம் வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட வண்டிகள் வருகிறது.
இந்த குவாரி காலை 5 மணி முதல் மதியம் வரையிலும் இயங்கி வருகிறது. மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் மாட்டு வண்டிகள் அகரம்சீகூர் வழியாக வந்து வெள்ளாற்று மேம்பாலத்தில் செல்கிறது. இதனால் அகரம்சீகூர் பஸ்நிலையத்தில் காலை நேரத்தில் வேலைக்கு செல்லுபவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். எனவே இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்து திட்டக்குடி மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று பகல் சுமார் 11 மணியளவில் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த மணல் வண்டி அகரம்சீகூர் பஸ்நிலையம் அருகே உள்ள வடிகால் வாய்ககாலில் கவிழ்ந்து. உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மாடுகளை அவிழ்த்து காப்பாற்றி, மணலுக்கு அடியில் சிக்கி கொண்ட மணல் வண்டியை ஒட்டி வந்தவரையும் காப்பாற்றினர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேரிகார்டை நடுவில் வைத்து இந்த வழியாக மணல் வண்டிகள் செல்ல கூடாது என சாலை மறியல் செய்தனர்.
இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன், சுப்ரியா வெங்கடேசன், நாகராஜன், ராஜேந்திரன், செல்வமுருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்து மங்களமேடு போலிசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை முதல் இந்த வழியாக மாட்டு வண்டி செல்ல தடை விதிக்கப்படும் என போலிசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் இந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.