DMK plans to revive the stalled pariventarai to win! former Minister A.Raja
மதசார்பற்ற கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சி சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராஜா தனது சொந்த ஊர் உள்ளிட்ட பல கிராமங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர், எசனை, மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, செட்டிக்குளம், பாடாலூர், பெரம்பலூர் சங்குப்பகுதியில் தீவிர மேற்கொண்ட அவர் பேசியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலினால் தேர்வு செய்யப்பட்ட பாரிவேந்தர் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக உங்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளார், அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
பாரிவேந்தருக்கு வாக்குகள் சேகரிக்க வந்துள்ள எனக்கு என்ன உரிமை என்று கேட்பீர்கள் இதே பாராளுமன்ற தொகுதியில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அமைச்சராகவும் இருந்து உங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கலைக்கல்லூரி தொழில்நுட்ப கல்லூரி ஐடிஐ மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்தேன் என்ற உரிமை உள்ளது
அவரை ஏன் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றால் அவர் வந்தால்தான் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் கிடப்பில் உள்ள திமுக கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேறும். அவர் தனிப்பட்ட முறையில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு, 300 பேருக்கு கல்வி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்
நான் இதே தொகுதியில் எம்.பி யாக மூன்று முறையும், அமைச்சராக இருந்தவன் என்ற முறையில் நான் உங்களிடம் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்வது என்வென்றால், நான் விட்டு சென்ற மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய நிறைவேற்ற பாரிவேந்தருக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்
இந்தியாவில் ஆளுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்
பிரதமர் மோடி வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று கூறினார் ஆனால் இதுவரை போடவில்லை கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள்
கட்டுவதற்கு பட்டு வேட்டி தருகிறேன் என்று கூறி கட்டியிருந்த கோவணத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள் என்பதுபோல, 15 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று சொன்னவர்கள் உங்களிடமிருந்தே 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை பிடுங்கிக் கொண்டனர்
10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறியவர்கள் உங்களில் யாராவது ஒருவருக்கு மோடி வேலைவாய்ப்பு தந்துள்ளாரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்
தேனும் பாலும் ஓடும் என்று கூறினார்கள் இங்கு அப்படி எதுவும் ஓடவில்லை,
பாரதப் பிரதமராக மோடி இருந்த ஐந்து ஐந்து ஆண்டு காலத்தில் 85 நாடுகளுக்கு 1400 கோடி ரூபாய் செலவு செய்து பயணம் செய்துள்ளார் அதனால் என்ன பயன் கிடைத்தது உங்களது வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து வெளிநாடுகளை சுற்றியுள்ளார்.
இந்து வெறியர்களான அவர்களிடமிருந்து இஸ்லாமியர்களுக்கு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ளதா இங்கே தமிழகத்தில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் சிபிஐ அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார்
தற்பொழுது மக்கள் விரோத ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது, கஜா புயல் வறட்சி ஆகியவற்றிற்கு நிவாரணமாக 39 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதற்கு யானைப் பசிக்கு சோளப்பொறி போல ஒரு மாதம் ஆய்வு செய்த பின்னர் 1400 கோடி ரூபாய்தான் வழங்கியுள்ளார்கள்.
அவர்கள் காவிரி பிரச்சனை நீட் தேர்வு உள்ளிட்ட எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு செய்யவில்லை. எனவே, மத்தியிலும் மாநிலத்திலும் மாற்ற வேண்டும், இங்கு மருத்துவக் கல்லூரிக்கு எனது சொந்த பணத்தில் இடம் வழங்கி திமுக தலைவர் கலைஞர் மருத்துவ கல்லூரி தொடங்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் ஆட்சி மாற்றத்தினால் அந்த அந்த பணிகளைத் தொடங்கவில்லை.
தற்போது ஆளும் கட்சியாக உள்ள எம்எல்ஏ ஜெயலலிதாவிடம் கேட்டும் இந்தத் திட்டத்தை தொடங்க வில்லை ஜெயலலிதாவிடம் தான் பயம் என்றால் தற்போது உள்ள எடப்பாடி இடமும் அவர்கள் கேட்டு மருத்துவக் கல்லூரி தொடங்க வில்லை 7 ஆண்டுகளாக இத் திட்டத்தை நிறுத்தி வைத்த அரசிற்கு பாடம் புகட்ட பாரிவேந்தருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசினார்.
இந்த தொகுதியில் பாரிவேந்தரை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நான் நீலகிரியில் வெற்றி பெற்றால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் பெறுவீர்கள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல நானும் பாரிவேந்தரும் இணைந்து உங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி பொருளாதார மண்டலம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம்
நாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பல திட்டங்களை செயல்படுத்தி பெரம்பலூர் தொகுதியில் சிங்கப்பூர் போல மாற்றுவோம்
2ஜி ஊழலில் என்னை 15 மாதம் சிறை வைத்திருந்தார்கள் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறினார்கள் என்னை உச்சநீதிமன்றத்திலும் பேச விடவில்லை நாடாளுமன்றத்திலும் பேசவிடவில்லை ஆனால் தற்பொழுது எனது வாதத்திறமையால் நான் ஊழல் அற்றவன் என்று நிரூபித்து வந்துள்ளேன்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மோடி தவறான பாதையில் செல்கிறார் என்று பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் காட்டி இது தவறு என்று கூறியும் மோடி அதனை ஏற்கவில்லை
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்று கூறினார் சினிமாவில் கதாநாயகன் என்றால் திமுக தேர்தல் அறிக்கை என்றால் வில்லன் மோடியின் தேர்தல் அறிக்கை படத்தில் வரும் அல்லக்கைகள் போல எடப்பாடி பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகின்றனர்
மாநிலத்தில் எங்களை ஊழல் கட்சிகள் என்று கூறிய அதிமுகவினர் அவர்களுடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 90 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததற்கான ஆவணங்களை சிபிஐ எடுத்துள்ளது இதை விட ஊழல் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்
இதுபோன்று பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இளம் பெண்களை கதற கதற மானபங்கப்படுத்திய வீடியோ காட்சிகளை கண்டு பொது மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் போலீசார் இதனை விசாரிக்க மறுக்கின்றனர்
எனவே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஒரே நேரத்தில் ஏற்பட்டு மோடியை வீட்டுக்கு அனுப்ப பாரிவேந்தரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ராஜா கேட்டுக்கொண்டார்.
சொந்த ஊரான வேலூர் கிராமத்தில் பிரச்சாரம் செய்த ஆ ராசா, மண்ணின் மைந்தனாக உங்களிடம் வாக்குகள் கேட்டு நான் வருகை தந்துள்ளேன், இந்த ஊரில் நான் யாரையும் கட்சிக்காரர்கள் ஆக பார்ப்பதில்லை என்னை நம்பி பாரி வேந்தர் இத் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே இவ்வூரிலுள்ள அதிமுகவினரும் தவறாமல் பாரிவேந்தருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன் பின்னர், வேலூர் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு ஆர் ராஜா பாரிவேந்தரை அழைத்துச் சென்று குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினர்.
வேட்பாளர் பாரிவேந்தர் உடன் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்ட தலைவர் அன்பழகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தங்கராஜ், உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
ஒவ்வொரு கிராமங்களிலும், ஆயிரக்கணக்கானோர் திரளாக பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். வேட்பாளர் பாரிவேந்தர் மற்றும் உடன் வந்த கட்சியினரை ஆரத்தி எடுத்த பெண்கள் வெற்றி திலகமிட்டு வாழத்தி அனுப்பினர்.