Do government hospitals play people alive? Vaiko condemned
மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர், வைகோ விடுத்துள்ள அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற எட்டு மாத கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணுக்கு சிவகாசியில் உள்ள அரசு மருத்தவமனையில் இருந்த இரத்த வங்கியில் இரத்தம் பெற்று, சாத்தூர் மருத்தவமனையில் அவருக்குச் செலுத்தப்பட்டு இருக்கிறது. சில நாட்களில் கர்ப்பிணிப் பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மீண்டும் சாத்தூர் மருத்துவமனை சென்றபோது, மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று ஏற்பட்டு உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்யாமல் வைக்கப்பட்டிருந்த இரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டதால், அவர் எச்.ஐ.பி. பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கால் இத்தகைய கொடூரம் நடந்தேறி இருக்கிறது.
சாதாரண ஏழை எளிய மக்கள்தான் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். மருத்துவ செலவுகள் எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விட்டதால், நடுத்தர குடும்பங்கள் சமாளிக்க முடியாமல் போராடி வரும் நிலையில், ஏழை மக்கள் அரசு மருத்துவமனையைத்தான் நம்பி இருக்கின்றனர். அங்கு இது போன்று அவர்கள் உயிரோடு விளையாடும் சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
வரவு – செலவு திட்டத்தில் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் , அவை மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுவதாகத் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகள், நகர மருத்துவமனைகளின் செயல்பாடுகளை உடனடியாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக இரத்த வங்கிகளின் நிலைமை, சேமிக்கப்படும் இரத்தத்தின் தன்மை, இரத்த தானத்தின் மூலம் பெறப்படும் இரத்தத்தின் மாதிரி பரிசோதனை போன்றவற்றில் மிக அதிகக் கவனம் செலுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்த வேண்டும்.
சாத்தூரில் நிகழ்ந்ததைப் போன்று இனி ஒரு சம்பவம் வேறு எங்கும் நடக்கக் கூடாது.
சாத்தூரில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி. கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடையவும், குழந்தைப் பேறு எவ்வித குறைபாடும் இன்றி நடந்தேறவும், தகுந்த உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசு அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.