பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், துணைவேந்தர் தேர்வுக்கான நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், எல்லாம் மர்மமாக இருப்பதும் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017-ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட பி.பி. செல்லத்துரை 2018-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் பணி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான குழுவை இறுதி செய்வதில் ஏராளமான குழப்பங்கள் நிலவிய நிலையில், அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 14 பெயர்கள் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மூன்றாம் கட்டமாக மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் இருந்து ஒருவரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தமிழக ஆளுனர் நியமிப்பார்.

துணைவேந்தர் பதவிக்கு 196 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஆய்வு செய்த தேர்வுக்குழுவினர், அவர்களில் இருந்து 14 பேரை அடுத்தக்கட்டத்திற்கு தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களில் தகுதியற்ற பலரும், அனுபவம் இல்லாத பலரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. துணைவேந்தர் பணிக்கான அடிப்படைத் தகுதி முனைவர் பட்டமும், குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவமும் ஆகும். இவற்றுடன் பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிர்வாகத் திறமையும் வேண்டும். ஆனால், இவை இல்லாத சிலரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன.

துணைவேந்தர் நியமனம் என்பது கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டும் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். துணைவேந்தர் பணிக்கு விண்ணப்பித்தவரின் கல்வித்தகுதிகள், பணி அனுபவம், ஆராய்ச்சி அனுபவம், நிர்வாக அனுபவம், முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தமை ஆகிய ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் தான் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், மதுரைக் காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை அத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தால், இரண்டாம் கட்ட ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட 14 பேர் உட்பட 196 பேரும் பெற்ற மதிப்பெண் விவரங்களை தேர்வுக்குழு வெளியிடாதது ஏன்?

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் பற்றி அண்மையில் சர்ச்சை எழுந்த போது, துணைவேந்தர் நியமனத்தில் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும் என்று ஆளுனர் உறுதியளித்தார். ஆனால், ஆளுனர் அளித்த உத்தரவாதம் இதில் கடைபிடிக்கப்படாதது ஏன்? ஆளுனராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற பிறகு சில தமிழக பல்கலைக்கழகங்களுக்கு ஒப்பீட்டளவில் நல்ல துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், வெளிப்படைத்தன்மை எங்கே?

பேராசிரியர் பணி அனுபவமும், தகுதியும் இல்லாதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படக்கூடாது. தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் மக்கள் இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமியின் பெயர் இறுதி கட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்கு பேராசிரியர் பணி அனுபவம் இல்லை என்று கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்துல்கலாம் அவர்கள், ஆசிரியர் பணி செய்ய முன்வந்த போது, அவருக்கு துணைவேந்தர் பதவி வழங்க தமிழக அரசு முன்வந்தது. ஆனால், ஆசிரியர் அனுபவம் இல்லாத நான் துணை வேந்தர் பதவி வகிக்க தகுதியில்லாதவன் என்று கூறி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார். அப்துல்கலாம் கூறிய அந்தக் காரணம் அனைவருக்கும் பொருந்தும்; அது தான் சரியான அளவுகோல்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியிலிருந்து செல்லத்துரை நீக்கப்பட்டதற்கு காரணமே அவருக்கு பேராசிரியர் பணி அனுபவம் இல்லை என்பது தான். மீண்டும் ஒருமுறை அதே தவறை செய்து காமராசர் பல்கலைக்கழகத்தை முடக்க காரணமாகிவிடக் கூடாது. அதுமட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கி 6 ஆண்டுகளாக நிர்வாகக் கேட்டில் சிக்கி சீரழிந்து வருகிறது. அதிலிருந்து அப்பல்கலைக்கழகத்தை மீட்டெடுத்து கல்வி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நிர்வாகத்தில் சிறந்த, அப்பழுக்கற்ற கல்வியாளர் ஒருவர் தான் அதன் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். இதை மனதில் கொண்டு துணைவேந்தர் நியமனத்தில் தேர்வுக்குழுவும், பல்கலைக்கழக வேந்தரான ஆளுனரும் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!