Dogs chasing children to bite in Perambalur: motorists in fear! Public demand to control!!
பெரம்பலூர் நகரில் சுற்றித் திரியும் நாய்கள் நடந்து செல்லும், சிறுவர்கள் உள்பட 4 பேரை கடித்ததால் , நகரில் சுற்றித்திரியும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளர்ந்து வரும் பெரம்பலூர் நகராட்சிக்கு, இணையாக நாய்களின் எண்ணிக்கையும், உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரம்பலூர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் 4 ரோடு செல்லும் வழியில் உள்ள சிதம்பரம் நகர், மற்றும் மது மருத்துவமனை உள்ளிட்ட பெரம்பலூர் காமராஜர் பேருந்து நிலையம், திருநகர், இந்திரா நகர், கம்பன் நகர், சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம் உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகளில், அவை கூட்டம் கூட்டமாக மார்கழி மாதம் என்பதால், கும்மாளமிட்டு சுற்றித்திரிகின்றன. இதனால், ரோட்டில் நடந்து செல்வோர் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்வோரை கண்டதும் குஷியுடன் நாய்கள் துரத்துகின்றன. இதனால், அவர்கள் நிலைத்தடுமாறி விழும் அபாயம் உள்ளது.
நடந்து செல்பவர்களையும் கடிக்க வருகின்றன. மேலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தூங்க விடாமல் இரவு முழுவதும் ஊளையிட்ட வண்ணமாக உள்ளது. அவ்வழியாக வருவோரையும், போவோரையும் மிரட்டி விரட்டுவதுடன், குழந்தைகள், ஆடு, மாடுகளையும், நாய்கள் கூட்டம் கடித்து குதறுகின்றன. அதனால் கால்நடை வளர்ப்போரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
சாலையில் செல்லும் சிறுவர்களை கண்டால் திண்பண்டங்களுக்காக கடிக்க நாய்கள் துரத்துகின்றன. ஆனால், தனியாக செல்லும் சிறுவர்கள் நாய்களிடம் இருந்து தப்பிக்க சாலையில் குறுக்கு மறுக்காக தலை தெறிக்க ஓடுகின்றனர். அதனால் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் இதே போன்று சிறுவன் ஒருவன் நாய்களிடம் இருந்து தப்பிக்க சாலையில் ஓடிய போது காரில் விழுந்திருப்பான். காரை ஓட்டி வந்த தொழிலபதிர் வாகனத்தை நிறுத்தி நாய்களை விரட்டி விட்டு, சிறுவனை பெற்றோர்களிடம் போன் செய்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. எனவே, பலரை நாய்கள் கடிக்கும் முன் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கவும், மேலும், வளர்ப்பு நாய்களுக்கு உரிய அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.