Driver Injured near Perambalur: 3 including a woman hospitalized in another incident

பெரம்பலூர் அருகே இருவேறு தாக்குதல் சம்பவங்களில் லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டும், இளம் பெண்ணிற்கு கை முறிவு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள க.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(50), லாரி டிரைவரான இவர், அதே ஊரை சேர்ந்த மளிகைக் கடைக்காரரான வேல்முருகன்(45), என்பவருடன் நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வேல்முருகன் லாரி டிரைவர் ராமச்சந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வேல்முருகனின் மனைவி கனிமொழி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கருத்து காரணமாக சிறுகுடல் கிராமத்திற்கு 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்ட நிலையில் தனியாக வசித்து வந்த வேல்முருகனை லாரி டிரைவர் ராமச்சந்திரன் அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த வேல்முருகன் அவரை அரிவாளால் வெட்டியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது

இதேபோல் மற்றொரு சம்பவத்தில், பெரம்பலூர் அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக நிகழ்ந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் இளம் பெண்ணிற்கு கை முறிவு ஏற்பட்டும், மூதாட்டி உட்பட 3 பேர் தாக்குதலில் நிலை குலைந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக துரைராஜ் மகன் முத்துக்குமார்(22), மற்றும் கண்ணன் மகன் சரவணன்(23), ஆகியோர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கியதில், கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி திலகவதி(32), கை முறிவு ஏற்பட்டும், மூதாட்டி பாப்பாத்தி(75), அச்சு(16), (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மற்றும் வேல்முருகன்(36), ஆகியோர் தாக்குதல் சம்பவத்தில் நிலை குலைந்தும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதல் சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டு, தப்பியோடி தலைமறைவான முத்துகுமார், சரவணன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில் இருவேறு கிராமங்களில் நிகழ்ந்த இந்த திடீர் தாக்குதல் சம்பவம் இரண்டு கிராமங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!