Drug Eradication and Rehabilitation Awareness Camp for College Students on behalf of Perambalur District Legal Services Commission

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி சுபாதேவி, உத்தரவின்படி, போதைபொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு பற்றிய சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் இணையவழியில் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி, கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி வினோதா, முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் காமராஜ் மற்றும் பெரம்பலூர் அவ்வை மகளிர் குழுக்களின் சங்கமத்தின் புதிய பாதை போதை மறுவாழ்வு மையத்தின் மனநல மற்றும் குடும்ப நல ஆலோசகர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் வினோதா, மாணவ பருவம் தான் வாழ்க்கையின் தரத்தினை உயர்த்தி சமூகத்தில் மேன்மையடைய மிக முக்கியமான பருவமாக உள்ளது என்றும் குறிப்பாக கல்லூரி பருவம் என்பது மாணவர்களை செதுக்கும் சிறந்த காலமாகவும் திகழ்கிறது. ஆகையால் தான் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமினை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் காமராஜ் பேசுகையில், தனது பணியில் எதிர்நோக்கும் சவால்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு போதை என்பது மனிதனை முற்றிலும் செயலிழக்க செய்து விடுகிறது, குடும்ப உறவுகளை சிதைத்து, பொருளாதார நிலையினை தாழ்த்தி மன அழுத்ததை ஏற்படுத்தி தினசரி வாழ்க்கையினை பாதிக்கிறது. எனவே, மாணவர்கள் தக்க விழிப்புணர்வுடன் செயல்பட்டு போதை பழக்கங்களுக்கு ஆளாகாமல் தங்களின் இலக்கினை நோக்கி சரியான பாதையில் பயணித்து பெற்றோருக்கும், தாங்கள் சார்ந்த கல்வி நிறுவனத்திற்கும் நல்ல பெயரினை பெற்று தர வேண்டும். அதற்காக நல்ல புத்தங்களை வாசிக்கும் பழக்கங்களை கடைபிடித்து தன்னம்பிக்கையினை வளர்த்து தங்களின் வாழ்க்கையினை செம்மைப்படுத்தி மகிழ்வான வாழ்வை அடைய முடியும் என்றும் பெற்றோர்கள் தங்களின் குழந்தை வளர்ப்பில் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேணடும் என்றும் கூறினார்.

அவ்வை மகளிர் குழுக்களின் சங்கமத்தின் புதியபாதை போதை மறுவாழ்வு மைய மனநல மற்றும் குடும்ப நல ஆலோசகர் திரு. மணிகண்டன் பேசுகையில் போதைக்கு அடிமையானவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையினை அதிலிருந்து மீட்டு நல்ல வாழ்க்கையினை தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மூலம் சேவையினை ஆற்றி வருகிறோம் என்றும் மாணவ சமூகம் ஆக்க சிந்தனைகளை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளில் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதோடு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் யாரும் போதை பழக்கங்களுக்கு ஆளாகமால் இருக்க மாணவ சமூகம் சிறந்த சேவையினை ஆற்ற வேண்டும் என்று கூறினார். இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், கல்லுரி முதல்வர்(பொ) மற்றும் பேராசியர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக உதவியாளர்கள் சந்தானம் மற்றும் சக்கரபாணி ஆகியோர் செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!