Easter festival in the Perambalur district: a special prayer for Christian churches

பெரம்பலூர் மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களின் உயிர்ப்பு பெருவிழா எனப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி ஈஸ்டர் பண்டிகையுடன் நிறைவடைகிறது.

இயேசு இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் சிலுவையில் அறையப் படுவதற்கு முன் ஜெருசலேம் வீதிகளில் கழுதை மீது ஏறி ஜெருசலேம் மக்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது குருத்தோலை மற்றும் மரக்கிளைகளை பிடித்து அவரை வரவேற்றனர்.

அதை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இந்த உலகில் வாழ்ந்த கடைசி காலத்தில் இயேசு தனது சீடர்களுடன் மேல்வீட்டின் அறையில் இராப்போஜனம் உட் கொண்டார். இதை தாம் திரும்ப வருமளவும் கடைபிடிக்குமாறு தன்னுடைய சீடர்களுக்கு கட்டளையிட்டு சென்றதை நினைவு கூறும் விதமாக கட்டளை வியாழன் அனுசரிக்கப்பட்டது.

14-ஆம் தேதி பெரிய வெள்ளிக்கிழமையாக அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் மும்மணித் தியான ஆராதனை நடந்தது. மும்மணித் தியான ஆராதனையில் இயேசு சிலுவையில் சொன்ன 7 வசனங்களின் பேரில் செய்தி கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ஆம் நாள் உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

இதனையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் சொரூபங்கள் துணியால் மூடப்பட்டு, மாலையில் திவ்ய நற்கருணை ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது கிறிஸ்தவர்கள் பல்வேறு கிறிஸ்தவ பாடல்களைப்பாடி மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 1 மணி வரை கிறிஸ்தவ இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதற்காக பெரம்பலூர் புனித பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அருட்சகோதரிகள், கத்தோலிக்க சங்கத்தினர், அன்பியம் குழுவினர், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்திலும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதே போன்று, பெரம்பலூரில் சி.எஸ்.ஐ. தேவாலயம், அன்னமங்கலம், நெற்குணம், திருமாந்துறை, தொண்டமாந்துறை, திருமாந்துறை, திருவாளந்துறை, நூத்தப்பூர், எறையூர், பாடாலூர், பாத்திமாபுரம், வடக்கலூர், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!