பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 100 சதவீத வாக்காளர் பதிவு மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எய்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறையின்படி வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலங்கள், மனிதச் சங்கிலிகள், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கல்லூரி, வேப்பூர் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை கலை அறிவியல் கல்லூரி, தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்டு வளாக முகவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் தங்கள் கல்லூரிகளின் சார்பில் மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து வாக்காளர் விழிப்புணர்வு ஒத்துழைப்புடன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும், புதுவாழ்வுத் திட்டம், மகளிர் திட்டத்தின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், எல்.இ.டி திரைகொண்ட வாகனம் மூலம் வாரச்சந்தைகள், கோவில் திருவிழாக்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர;வு குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கடந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதங்களை கணக்கிட்டு 70 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குப் பதிவாகியுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தெந்தெடுத்து அந்தப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி அங்கு உள்ள மக்களிடம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வாலிகண்டபுரம் பகுதியில் தனலட்சுமி கல்வியியல் கல்லூரியின் மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும், சாரதா மகளிர் கலைக் கல்லூரி, சிறுவாச்சூர் கோவில் வளாகம் மற்றும் வாரச் சந்தையில் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது.