இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வழங்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுககான ஆலோசனைக்கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் தலைமையில் இன்று நடந்தது.
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016-யை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமறைகளுக்கு எதிரான வகையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டும் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டும் வருகின்றன.
வழக்கமான திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் தவறில்லை. புதிய திட்டங்கள் எதையும் நடைமுறைப் படுத்தக்கூடாது. புதிய பணிகளுக்கு டெண்டர் போடக்கூடாது. ஏற்கனவே டெண்டர்கள் போடப்பட்டிருப்பின் அதை திறக்கக் கூடாது. முன்னதாகவே டெண்டர்கள் திறக்கப்பட்டிருந்தால் அதை தகுதிசரிபார்ப்பிற்கு உட்படுத்தக்கூடாது.
ஏற்கனவே அப்படி தகுதி சரிபார்த்திருப்பின் அந்த டெண்டர்களுக்கு உரியவர்களுக்கு வேலைக்கான ஆணையினை வழங்கக்கூடாது. ஏற்கனவே வேலைக்கான ஆணைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர;கள் புதிதாக அந்த வேலையை துவங்கக் கூடாது.
இதுபோன்று பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் குறித்து உங்கள் துறைசார்ந்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை தயங்காமல் கேட்டு தெளிவுபெற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான முறையிலும், நடுநிலைமையுடனும் சட்டமன்றப்பொதுத்தேர்தலை நடத்திடும் வகையில் அனைவரும் செயல்படவேண்டும்.