பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் எங்கெங்கு பயணம் செய்கின்றனர் என்பதை கண்காணிக்கும் வகையில் குழுவினர் செல்லும் வாகனங்களில் ஜி.பி.ஆர;.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழுக்களில் மொத்தம் 12 குழுக்கள் இடம்பெற்றுள்ளன. இக்குழுக்களின் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இக்கருவிகளின் உதவியால் குழுவினர் எந்தெந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை எளிதில் கண்காணிக்க முடியும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திலும் இந்த வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை 1800 425 7031 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ இக்கட்டுப்பாட்டு மையம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் விதிமுறை மீறல்களையும் இக்கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலகம் அருகே இந்தக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் உள்ளூர் கேபிள் சேனல்கள் தொடர்ந்து கண்காணிக்கபட்டு அதில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ ஒளிபரப்பப்பட்டால் அவை பதிவு செய்யப்பட்டு அதற்கான செலவுகள் வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும்.
மேலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தயார் செய்யப்படும் விளம்பரங்களை அரசியல் கட்சியினர் ஊடக சான்றளிப்பு குழுவினரிடம் அனுமதிபெற்ற பிறகே ஒளிபரப்பவேண்டும். இக்குழுவிற்கான தலைவராக மாவட்ட தேர்தல் அலுவலரும், உறுப்பினர்களாக வருவாய் கோட்டாட்சியர், தேசிய தகவல் மைய அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிருபர் ஆகியோர் உள்ளதாக தெரிவித்துள்ளார்.