Election rules for printing Press, cable TV, digital banner, halls, hostels jewelry pawn shop owners
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ஐ முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாய கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், உரிய அனுமதியின்றி ஊடகங்களில் விளம்பரங்கள் ஏதும் ஒளிபரப்பக் கூடாது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மட்டுமே ஒளிப்பரப்ப வேண்டும்.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மேற்படி குழுவின் ஒப்புதல் ஏதுமின்றி ஒளிபரப்புதல் கூடாது. ஒளிபரப்பிற்கு முன்னர் மேற்படி குழுவால் விளம்பரங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்தல் காலங்களில் ஏதேனும் ஒரு வேட்பாளர், கட்சி அல்லது ஏதேனும் நிகழ்வு பற்றிய அறிக்கைகளை மிகைப்படுத்திக் காட்டக் கூடாது. உண்மையாக நடைபெற்ற பிரச்சாரத்தை ஒளிபரப்பும் போது ஏதேனும் ஒரு வேட்பாளர், கட்சி சார்பாக சிலவற்றை புறக்கணிக்கவோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது. ஒரு பிரிவினருக்கு எதிராக பிரிவினையை தூண்டும் வகையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒளிபரப்பக்கூடாது.
அச்சகம் மற்றும் டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டு பிரசுரம் செய்யும் போது கண்டிப்பாக அச்சக உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் பதிப்பகத்தார் பெயர், முகவரி ஆகியவைகள் பொதுமக்கள் படிக்கும் வகையில் தெளிவாக சுவரொட்டி (ம) துண்டு பிரசுரத்தின் முன் பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும்.
எந்த ஒரு அச்சக உரிமையாளரும், தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் அச்சிடுவதற்கு முன்பு உரிய பதிப்பகத்தாரிடம் அனுமதி பெற வேண்டும் (இணைப்பு – 1). பதிப்பகத்தாரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அச்சக உரிமையாளர்கள் அச்சு செய்ய வேண்டும். அச்சடித்த மூன்று தினங்களுக்குள் இணைப்பு-2 படிவத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவா;களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமானது சட்டத்திற்கு புறம்பானதாகவோ அல்லது மதம், இனம், மொழி, வகுப்பு மற்றும் சாதி ஆகிய விவரங்கள் தொடர்பான எதிர்ப்பு அல்லது தனிமனித நடத்தை குறித்த விவரங்கள் எதிர்ப்பு உடையதாக இருந்தாலோ, தொடர்புடைய அச்சக உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், இதர சமுதாய கூடங்களின் உரிமையாளர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ள போது கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது அதன் விபரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ள போது, கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், வேட்டி-சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கல்யாண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும். கோவில்களில் பூஜை அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ, வாக்காளர்களுக்கு விருந்து வைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படின் அவை குறித்த தகவல்களை உடனடியாக அருகாமையிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் முடிவுறும் நாளான 04.04.2021 மாலை 5.00 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் எவரும் கல்யாண மண்டபங்களில் தங்கிட அனுமதி தரக்கூடாது.
நகை அடகு கடை உரிமையாளர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வரப்பெற்ற நிலையில், பொதுக்கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒரே நபர், பலமுறை தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு நிகழ்வுகளில் அடகு வைத்த நகைகளை திருப்ப முற்பட்டால் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடகு வைக்கப்படும் நகைகள் மீளத்திருப்பப்படும் போது அவை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தால் அதன் விவரங்களை உடனடியாக அருகாமையிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021ல் எந்தவித விதிமீறல்களுக்கும் இடமளிக்காமல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சஙகர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.