Election Violation: Action within 100 Minutes on Complaint through cVIGIL App : Perambalur Collector Information!
தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் சி-விஜில் என்ற ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தேர்தல் மாதிரி நடத்தை விதிமீறல்கள் மற்றும் தேர்தலின் போது ஏற்படும் செலவு மீறல்களைப் புகாரளிக்க ஒரு புதுமையான மொபைல் செயலியாகும். இந்த செயலியினை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-ஓஎஸ் சாதனங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் தேர்தல்களின் போது மாதிரி நடத்தை விதிகளை மீறினால் குடிமக்கள் புகாரளிக்க முடியும். அவ்வாறு புகாரளித்த நபர்கள் தங்கள் புகார்களின் மீது எடுக்கப்பட்டும் நடவடிக்கையின் முன்னேற்றத்தைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்த செயலி பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், நம்பகத்தன்மையும் கொண்டது. இந்த செயலியில் புகாரளித்த நபர்களின் ரகசியம் காக்கப்படும்.
விதிமீறல் தொடர்பான புகைப்படம்/வீடியோவை இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கேமரா, நல்ல இணைய இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் அணுகல் ஆகியவற்றைக் கொண்ட எந்த ஆண்ட்ராய்டு (ஜெல்லிபீன் மற்றும் அதற்கு மேல்) /iOS ஸ்மார்ட்போனிலும் இந்த செயலியை நிறுவி பயன்படுத்தலாம். இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், குடிமக்கள் தேர்தல் விதிமீறல்களை நேரில் பார்த்த சில நிமிடங்களில் உடனடியாக தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு விரைந்து புகார் அளிக்கலாம்.
இந்த செயலி,மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் பறக்கும் படை / நிலையான கண்காணிப்பு குழுக்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி விரைவான மற்றும் துல்லியமான அறிக்கை, நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்க பெரிதும் பயன்படுகிறது.
சிவிஜில் என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதில் குடிமக்கள் ஆற்றக்கூடிய பொறுப்பான பங்கை வலியுறுத்துவதுடன், தேர்தல்கள் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான மதிப்புமிக்க செயலியாகவும் உள்ளது. இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.