Electricity Board announcement on safety to avoid electrical accidents and loss of lives during rainy season!
பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் மு. அம்பிகா விடுத்துள்ள அறிவிப்பு:
மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையிலிருந்தாலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ, மின் கம்பி அறுந்து கிடந்தாலோ, பொது மக்கள் எவரும் அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் வாரியத்தைச் சாராத நபர்கள் எவரும் மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின் தடை ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரியப் பணியாளர் மூலம் மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும்.
பழுதான வீட்டு மின்னிணைப்பு ஓயர்களை மாற்றுதல் மற்றும் தனிப்பட்ட மின்தடை நீக்குதல் போன்ற செயல்களை பொதுமக்கள் மின்வாரியம் சாராத பிற பணியாளர்களை கொண்டு பணி மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் மின்பாதை / மின்கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும், மின் பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும்.
டிராக்டர் மற்றும் லாரியில் கரும்பு போன்றவற்றை அளவுக்கதிகமாக ஏற்றி செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை / மின்கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடு / கட்டிடம் கட்டும்போது மின்பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும் மின் பாதையின் அருகில் செல்லாமலும், தொடாமலும் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை சுமந்து செல்லும் பொழுது அருகில் உள்ள மின்பாதையினை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக கட்டுமான பணியினை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும் போது தரமான வயரிங் சாமான்களை உபயோகித்தும் முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு Earth Leakage Circuit Breaker பொருத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தினை தவிர்க்கும்படியும்,
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய விலங்கினங்களை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்த்திடுமாறும், பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணியினை மேற்கொள்ளும்போது மின் இணைப்பை மின் நிறுத்தம் செய்து, மீண்டும் உறுதிபடுத்திய பிறகு பணியை கவனமாக செய்யுமாறும்,
டிப்பர் லாரிகளை மின்பாதைகளுக்கு அடியில் நிறுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் டிப்பர் லாரியின் பின்பகுதினை உயர்த்தும் பொழுது மேலே செல்லும் உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்து மின்பாதையினை கவனத்தில் கொண்டு கையாள வேண்டும் என்றும்,
பயிர்களை விலங்குங்களிடமிருந்து பாதுகாக்க வயல்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மின்வேலிகளில் சிக்கி அதிக உயிர் சேதம் ஏற்படுவதால் இது குறித்த தகவல்களை பொதுமக்கள் மின்சார வாரியத்திடமோ அல்லது காவல்துறையிடமோ தெரிவிக்க வேண்டும்.
மின்கம்பங்களில் விளம்பர பதாதைகளோ மற்றம் கேபிள் டிவி வயர்களையோ கட்டக் கூடாது. இதனால் மின்விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதால், உடனடியாக மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் கேபிள் டிவி வயர்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
மழை மற்றும் விழா காலம் ஆதலால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறும் மின்விபத்தினை தவிர்க்க மிள்வாரியம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து மின்விபத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.