Eligible candidates can apply for the vacant post of 3 Graduate Teachers: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியர்கள்(தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல்) பணியிடத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த முறையில் மாதாந்திர தொகுப்பூதியத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.9,000- வீதம் ஒரு கல்வி ஆண்டில் கோடைவிடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-ன்படி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, வகுப்பு நடத்துதல் தேர்வு ஆகியவற்றின் மூலம் நிரப்பிடப்படும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது முழுக் கல்வித் தகுதி விவரங்களுடன் தட்டச்சு செய்து 28.12.2020 மாலை 05.00 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த காலி பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் ஆசிரியர் பணிக்கான முழுக்கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தினைத் தவிர எந்த விதமான படிகளும் வழங்கப்பட மாட்டாது.
பணிநியமனம் செய்யப்படும் ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரும் தற்காலிக பணியாளர்கள் ஆவர். பிற்காலத்தில் இவர்கள் நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் கோருதல் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர்களுக்கான சலுகைகளை பெற முற்றிலும் தகுதியற்றவர்கள்.
பணிநியமனம் செய்யப்படும் ஒப்பந்த ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை (கோடைவிடுமுறை தவிதுத்து) அல்லது காலிப்பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை இதில் எது முந்தையதோ அதுவரையில் பணியில் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பத்துடன் அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகளையும் இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 04238-225235 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.