Eligible candidates can apply for Wireman Helper Competency Examination : Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
2022-ம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வயர்மேன் ஹெல்ப்பர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்து தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறனறன.
விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை https://skilltraining.in.gov.in/DET/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
வடசென்னை, கோயமுத்தூர், சேலம், நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில், அம்பத்தூர், செங்கற்பட்டு, ஒசூர், ஈரோடு, திருச்சி, உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி, விருதுநர், தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, குன்னூர், அரியலூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம், இராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, திண்டிவனம், இராணிப்பேட்டை, தென்காசி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில் மேற்கண்ட தேர்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு தேர்வுகள் நடைபெறும். தேர்வு மையம் இறுதி செய்வது தொடர்பாக துறைத்தலைவரின் முடிவே இறுதியானது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு 26.07.2022 அன்றுக்குள் கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.