Elumur public the 6 hour-long road blockade in the village authorities of negligence
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமுர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடந்தாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று பொதுமக்கள் தொடர்ந்து சுமார் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டததில் ஈடுபட்டனர்.
எழுமுர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு நாளைக்கு ருபாய் 230 பதிலாக அனைவருக்கும் ருபாய் 120 மட்டுமே சம்பளமாக வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இன்று காலை 8.30 மணியளவில் எழுமூர் பெரம்பலூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்தும் இரண்டு மணி நேரம் கழித்து அங்கு வந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஉ) முரளிதரன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஊழல் : அலுவலர்களை மாற்ற கோஷம்
பொதுமக்களின் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல தெரியாமல் அருகில் இருந்த ஊராட்சி அலுவலகத்திற்கு முன் உட்கார்ந்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலை கைவிட மறுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்தும், கிராம ஊராட்சி செயலாளரை மாற்ற கோரியும் கோஷம் எழுப்பினர்.
மேலும் வேப்பூர் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடத்துள்ளது என சந்தேகம் கூறினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இந்த திட்டத்திற்கு என தனி அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தினால் மிகப்பெரிய ஊழல் வெளிவரும் என தெரிவித்தனர்.
மங்களமேடு காவல் ஆய்வாளர் ஞானசேகர் தலைமையில் போலீசார் எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இந்நிலையில் மதியம் சுமார் 2.30 மணியளவில் தகவல் அறிந்து வந்த மங்களமேடு டிஎஸ்பி ஜவகர்லால் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதைக் ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மாலை 3 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.