Engineer Gokulraj murder case; Yuvraj’s appearance in the Namakkal court. Case adjournment.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவரது கொலை தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவரது தாயார் செல்வி உள்பட 40 பேர் சாட்சியம் அளித்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சேலத்தை சேர்ந்த வக்கீல் பார்த்தீபன் என்பவர் சாட்சியம் அளித்தார். அவருக்கு இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வைத்து உள்ள திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் காண்பிக்கப்பட்டது. அதை பார்வையிட்ட வக்கீல் பார்த்தீபன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலரை அடையாளம் காண்பித்தார்.
இது குறித்து அரசு வக்கீல் கருணாநிதி கூறுகையில், வக்கீல் பார்த்தீபன் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவம் கோகுல்ராஜ் மற்றும் அவரது தோழி சுவாதி என்பதை அடையாளம் காட்டினார். மேலும் கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய வீடியோவில் உள்ள குரலும் அவரது குரல் தான் என கூறினார். இது தவிர இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள சிலரையும் அடையாளம் காண்பித்தார் என்று அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதி இளவழகன் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று வக்கீல் பார்த்தீபனிடம் குறுக்கு விசாரணை நடத்தலாம் என நீதிமன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது.